வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (10/10/2018)

கடைசி தொடர்பு:09:15 (10/10/2018)

``எனது பாதுகாப்புக்காகக் காத்திருந்த பேருந்து” - மும்பை பெண்ணின் நெகிழ்ச்சி!

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பாதுகாப்புக்காக ஒரு பேருந்து காத்திருந்தது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். 

ட்வீட்

பணி நிமித்தமாகப் பெண்கள் பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகிவருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள், இப்போது தைரியமாகப் பேசியும்வருகிறார்கள். இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து பெண்களுக்கு ஆதரவான குரல்கள்வருகின்றன. இதுதொடர்பாக # METOO என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்ட் ஆனது. 

இந்நிலையில், இரவு 1.30 மணிக்கு ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காக ஒரு பேருந்து காத்திருந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்  ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்,  ``அன்று இரவு 1.30 மணி இருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் மும்பை பேருந்து ஓட்டுநர்பேருந்து நிறுத்தத்தில் நான் இறங்க வேண்டும் என்றவுடன், பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர், உங்களை அழைத்துச் செல்ல யாராவது வருவார்களா என்று கேட்டனர். இல்லை, ஆட்டோ பிடித்துத்தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தேன். பின்னர், ஆட்டோ கிடைக்கும் வரை பேருந்து அந்த நிறுத்தத்திலேயே நின்றது. இதனால், எனக்கு மும்பை பிடித்திருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.  அதுமுதல் இந்தச் சம்பவம் டிரெண்ட் ஆனது. மேலும் பலர், தங்களுக்கும் மும்பையில் இதுபோன்ற அனுபவம் கிடைத்ததாக இதன் தொடர்ச்சியாகப் பதிவிட்டுவருகின்றனர். அந்த ட்வீட் வைரலானதும், அந்தப் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் தொடர்பான தகவல்களும் வெளியானது. ஓட்டுநரின் பெயர் பிரசாந்த் மயேக்கர். நடத்துநரின் பெயர் ராஜ் தின்கர். இருவருக்கும் பாராட்டுகள் குவிகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக, மும்பை மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளித்த அந்தப் பெண், ``அது ஒரு சின்ன விஷயம்தான். ஆனாலும் அன்று அது அத்தனை பெரிய விஷயமாக இருந்தது. எனது குடும்பம் அருகில் இல்லாதபோதும் மும்பையே என்னைப் பாதுகாத்ததாக உணர்ந்த தருணம் அது” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 10 வருடங்களாக அப்பேருந்தில் நடத்துநராக இருக்கும் ராஜ் தின்கர், ``பணியில் சேரும்போது பெண்களிடம், முதியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சி அளித்தார்கள். அதன்படிதான் நாங்கள் செயல்பட்டோம்” என்றார். 

 

Photo Credit: MUMBAI MIRROR