வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:08:58 (10/10/2018)

உத்தரப்பிரதேசத்தில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் - 5 பேர் பலியான சோகம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம்புரண்டதில், 5 பேர் உயிரிழந்தனர். 

ரயில்

photo Credits : Twitter/ @Ajay171K

டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா வரை நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இது காஸியாபாத், கான்பூர், லக்னோ, பாட்னா வழியாக மால்டா நகரைச் சென்றடையும். 

 நேற்று மாலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ், இன்று காலை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ வழியாக அலகாபாத் சென்றுகொண்டிருந்தது. ரயில், உ.பி-யின் ரேபரேலி (Raebareli ) மாவட்டத்தில் உள்ள ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்துக்கு 50 மீட்டர் முன்னர் எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டது. ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், வாரணாசி மற்றும் லக்னோவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லொஹானியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கும் உடனடி உதவிகள் செய்ய வேண்டும் என மாவட்ட நீதிபதி, எஸ்.பி, மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.