வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:02 (10/10/2018)

`வாக்குறுதிகள் என்னவாயிற்று என்றார்கள் மக்கள்; நாங்கள் சிரிக்கிறோம்!'- நிதின் கட்கரி

``நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்து பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். அதை நம்பிய மக்கள், எங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்'' என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

பாரதிய ஜனதா அமைச்சர் நிதின் கட்கரி

கலர்ஸ் மராத்தி சேனலில்,  நடிகர் நானா படேகர், தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, ''நாங்கள் ஆட்சிக்கு வருவோமென்று நினைக்கவில்லை. அதனால், பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். நாம்தான் ஆட்சிக்கு வரப்போவதில்லையே பின்னர் ஏன் அளிக்கும் வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்றும் உறுதியாக நம்பினோம். நாங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக மக்கள் எங்கள் கட்சியை ஆட்சியமைக்கச் செய்துவிட்டனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று மக்கள் கேட்கின்றனர். நாங்கள் சிரித்தபடி அதைக் கடந்துசெல்கிறோம். பெரிய பெரிய வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்தது உண்மைதான்'' என்றார். 

நிதின் கட்கரி பேசிய வீடியோவை, உடனடியாக காங்கிரஸ் கட்சி இணையத்தில் பரப்பியது. 'பாரதிய ஜனதா ஆட்சி பொய்யான வாக்குறுதிகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று' என்றும் ட்விட்டரில் பரப்பப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலின்போது பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவோம் என்று பேசியதையும் பலர் குறிப்பிட்டனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டு, 'நீங்கள் சொல்வது சரிதான் கட்கரி. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மக்கள் நலனுக்காகப் பாடுபடாமல், கட்சி நலனுக்காகவே செயல்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க