வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:10 (10/10/2018)

'தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு; சாலை விபத்துகள் அதிகம்'! - மத்திய போக்குவரத்துத் துறை தகவல்

2017-ம் வருடத்தில், தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்துள்ளதாக மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

விபத்து

கடந்த வருடம், நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான  ஓர் அறிக்கையைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 2017-ம் வருடம் மட்டும் இந்தியா முழுவதும் மொத்தம் 4.64 லட்சம் விபத்துகள் நடந்துள்ளதாகவும், இவற்றில் 1.47 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், “18 முதல் 45 வயது வரை உள்ள 72.1 சதவிகிதத்தினர் அதிகமாக விபத்தில் சிக்கியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் கடந்த வருடம் 30.4 சதவிகிதம் விபத்துக்கள் நடந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மற்ற சாலைகள் முறையே 25 மற்றும் 44.6 சதவிகிதம் நடந்துள்ளன. மொத்த இந்தியாவிலும் தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகமானவர்கள் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகள், முந்தைய வருடங்களைவிட தற்போது குறைந்துள்ளது. இதுவே 2016-ம் வருடத்துடன் ஒப்பிடும்போது, நாடுமுழுவதும் 3.3 சதவிகித உயிரிழப்புகள் குறைந்துள்ளன. மேலும், 4.8 சதவிகிதம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இருசக்கர வாகனங்களினால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதையடுத்து, கனமில்லாத வாகனங்கள், டாக்ஸி, ஜீப் போன்றவற்றினால் 24.5 சதவிகித விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.