வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:00 (10/10/2018)

`ரஃபேல் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் இறுதிசெய்யப்பட்டது?’ - உச்ச நீதிமன்றம் கேள்வி

பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடனான ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம், எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ரஃபேல் விமானம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க, கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், 59,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகக் கூறி வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஊழல் நடைபெற்றுள்ளதால், அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரினர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, அதை இன்று விசாரித்தது. விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், இந்த விவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், ஒப்பந்தம் குறித்து முழுமையான தகவல்களைத் தெரிவிக்க இயலாது. இந்த வழக்கு, அரசியல் லாபத்துக்காகப் போடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ரஃபேல் போர் விமானத்தின் விலை உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்று கூறியதுடன், இந்த ஒப்பந்தத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட விதம், ஒப்பந்தம் எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அளிக்க உத்தரவிட்டது. அந்தத் தகவல்களை சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் வரும் 29-ம் தேதி தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதுகுறித்து பிரதமர் மோடி வாய்திறக்காதது ஏன் எனத் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பிவருகிறார். அதேநேரம், ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி, மத்திய அரசு இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துவருகிறது.