வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (10/10/2018)

கடைசி தொடர்பு:15:10 (10/10/2018)

தொடங்கியது மைசூர் தசரா! 10 நாள்கள் கோலாகல கொண்டாட்டம் #MysoreDasara

கர்நாடகா மாநிலம் மைசூர் தசரா விழா, கோலாகலமாக 10 நாள்கள் கொண்டாடப்படும் விழா, மைசூரின் சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று தொடங்கியது. இந்த தசரா  விழாவை இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் மாநில அமைச்சர்கள்  பலர் கலந்துகொண்டனர். சாமுண்டீஸ்வரி அன்னைக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி இவ்விழா தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுதாமூர்த்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மலைப் பகுதி மக்களுக்கு மறுபுனரமைப்பு செய்து வீடுகள் கட்டித்தர அறக்கட்டளை சார்பாக 25 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக தெரிவித்தார். மேலும், கர்நாடகாவின் ஹெப்பால் ஏறி புனரமைப்பு பணிகளுக்காக ஏற்கெனவே வழங்கிய 35 கோடி ரூபாயோடு மேலும் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

                                                  இன்போசிஸ் அறக்கட்டளை
அவரைத் தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஒரு தாய்போல காக்கும் அவரின் நல்ல உள்ளத்துக்காக அவரால் இந்த அரசு விழா தொடங்கி வைக்கப்பட்டது என்று கூறினார். மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அவர் ரூ.200 கோடி வழங்கியதையும் கர்நாடக போலீஸ் துறையின் சைபர் பிரிவுக்கு ரூ.22 கோடி வழங்கியதையும் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார்.

இன்றிலிருந்து தொடங்கும் மைசூரு தசரா விழா இன்னும் பத்து நாள்கள் தொடரும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, உணவுத் திருவிழா, திரைப்படத் திருவிழா என்று மைசூரு முழுக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.