வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (10/10/2018)

10,500 உணவகங்களுக்கு கல்தா! - ஆன்லைன் டெலிவரி ஆப்கள் அதிரடி

கடுமையான அலுவலகப்பணி, முதுமையில் தனிமை போன்ற காரணங்களால் உணவுப்பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருகிறது. உணவுப்பொருள்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் இ-காமர்ஸ் இணையதளங்களான ஸ்விகி, சொமட்டோ, ஊபர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பேந்தா ஆகிய நிறுவனங்கள் 10,500 உணவகங்களை தங்களது நெட்வொர்க்கிலிருந்து நீக்கியுள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) அனுமதி பெறாமல் நடத்திவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஊபர் ஈட்ஸ்

அனுமதிபெறாத, பதிவு செய்யாத உணவகங்களை, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் டெலிவரி லிஸ்டிலிருந்து நீக்கும்படி இந்த இணையதளங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த ஜூலை மாதத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சொமட்டோ இணையதளம் 2,500 உணவகங்களையும், ஸ்விகி 4,000 உணவகங்களையும், ஃபுட்பேந்தா 1,800 உணவகங்களையும், ஊபர் ஈட்ஸ் 2,000 உணவகங்களையும் தங்களது நெட்வொர்க்கிலிருந்து நீக்கியுள்ளன. இப்படி நீக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கேட்டுள்ளது. அதன்பின் அப்பட்டியலிலுள்ள உணவகங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களிடமிருந்து உணவுப்பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ் உடன் பேசியபோது, ``உணவு சப்ளை செய்யும் ஆன்லைன் இணையதளங்களின் நெட்வொர்க்கிலிருக்கும் உணவகங்கள் கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாத உணவகங்களில் உணவை வாங்கக்கூடாது என ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் இ-காமர்ஸ் இணையதளங்களிடம் மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது. நெட்வொர்க்கிலிருக்கும் உரிமம் பெறாத உணவகங்களை உரிமம்பெற விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்பிறகும் உரிமம் இல்லாமல் இயங்கும் உணவகங்களின்மீது தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்களும் மாநில அரசு சார்பாக அறிவிப்பு கொடுத்து யார் யாரெல்லாம் உரிமம் பெறாமல் உணவகம் நடத்துகிறார்களோ அவர்களையெல்லாம் உரிமம் பெற விண்ணப்பிக்கும்படி விழிப்புஉணர்வு கொடுத்தோம். முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்கிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.