வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (10/10/2018)

கடைசி தொடர்பு:18:23 (10/10/2018)

இந்தியாவின் வான்வழிக் கவசம் S-400 ட்ரையம்ப்... எதிரிகளின் ஏவுகணைகளை எப்படி முறியடிக்கும்?

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து வான்வழிப் பாதுகாப்பு அமைப்பை வாங்கியிருக்கிறது இந்தியா. தேசத்தின் பாதுகாப்பில் இதன் பங்கு என்ன?

இந்தியாவின் வான்வழிக் கவசம் S-400 ட்ரையம்ப்... எதிரிகளின் ஏவுகணைகளை எப்படி முறியடிக்கும்?

ரு நாட்டை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க தரைப்பகுதி, வான் பகுதி, மற்றும் கடற்பரப்பு ஆகிய மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். இந்த மூன்றில் வான் பரப்பில் சற்று அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால் மற்ற இரண்டையும் விட வான் பகுதியின் மூலமாக ஒரு நாட்டில் ஊடுருவுவது சுலபம். அதன் காரணமாகவே அனைத்து நாடுகளும் அவர்களது வான் பரப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அந்த வரிசையில் சமீப காலமாக இந்தியாவும் இணைந்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் ரஷ்யாவிடமிருந்து S-400 டிரையம்ப் ( S-400 Triumf) என்ற வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவு செய்திருக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையொப்பமிடப்பட்டது.

புதின் மற்றும் மோடி

ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது அமெரிக்கா. ரஷ்யாவிடம் வர்த்தக ரீதியிலான தொடர்பு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து 40,000 கோடி ரூபாய் (5.43 பில்லியன் டாலர்) செலவில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது இந்தியா. ஒப்பந்தப்படி அடுத்த 24 மாதங்களில் S-400 அமைப்பை ரஷ்யா இந்தியாவுக்கு அளிக்கும்.

S-400 ஏவுகணை அமைப்புக்கான தேவை என்ன ?

S-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு

இன்றைக்குக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கையில் வைத்திருக்கும் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அக்னி - V வகை ஏவுகணை அதிகபட்சமாக 8,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் படைத்தது. இதை விட அதிகத் திறன் படைத்த ஏவுகணைகள் தற்பொழுது பரிசோதனை நிலையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அக்னி -VI வகை ஏவுகணை 8,000 முதல் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய திறன் படைத்தது. இது தற்பொழுது பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அடுத்ததாக 16,000 கிலோ மீட்டர் செல்லும் திறன் படைத்த சூர்யா என்ற ஏவுகணையை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. இது தவிர ப்ரித்வி, பிரம்மோஸ் என நம்மிடம் இருக்கும் ஏவுகணைகளின் பட்டியல் பெரியது. விரைவில் அதிநவீன ரஃபேல் போர் விமானங்களும் விமானப்படையில் இணையவிருக்கின்றன. ஆனால், இது மட்டுமே போதுமானதாக இருக்காது என நினைக்கிறது இந்தியா. ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலமாக எதிரிகளின் இலக்கைத் தாக்க முடியும். அதற்கான திறன் நம்மிடம் இருக்கிறது. அதே போல நமது வான் பரப்பில் எதிரிகள் நிகழ்த்தும் தாக்குதலையும் சமாளிப்பதற்குத் தயாராக இருப்பது அவசியம். அது போன்ற சமயங்களில் S-400 அமைப்பு உதவும். இதன் மூலமாக வானில் இருக்கும் இலக்குகளை எளிதாகத் தாக்கலாம். எடுத்துக்காட்டாக நமது வான் எல்லையை நோக்கி ஏவுகணை ஒன்று வந்துகொண்டிருந்தால் S-400 போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி வானிலேயே இடைமறித்து அழிக்க முடியும்.

S-400 அமைப்பு எப்படிச் செயல்படும்?

ஏவுகணை

இந்த அமைப்பு மொத்தம் 3 பிரிவுகளாக இருக்கிறது. ஒன்று சக்தி வாய்ந்த ரேடார், இரண்டாவது கட்டளைப் பகுதி, மூன்றாவது ஏவுகணையை ஏவும் வாகனம். இதில் ரேடார் அமைப்பு வான் பகுதியைக் கண்காணிப்பதற்குப் பயன்படும். அதற்காகச் சக்தி வாய்ந்த ரேடார் இதில் இருக்கும். S-400-யில் இருக்கும் ரேடாரால் அதிகபட்சமாக 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட பொருள்களை எளிதாக அடையாளம் காண இயலும். அடுத்ததாக இருக்கும் கட்டளைப் பகுதி மூலமாக ரேடார் தகவல்களைப் பார்க்கவும், ஏவுகணையை ஏவுவதற்கான கட்டளையைக் கொடுக்கவும் முடியும். ஏவுகணையை ஏவும் வாகனங்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். கட்டளை கொடுக்கப்பட்டவுடன் இந்த வாகனத்திலிருந்து ஏவுகணைகள் விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்.

S-400

அதில் இருக்கும் மற்றொரு ரேடாரானது பறந்து செல்லும் ஏவுகணையை இலக்கை நோக்கி வழி நடத்தும். தாக்குதல் நடத்தும் சமயங்களில் இவையனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும். இதன் மூலமாகப் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எனப் பல வகை இலக்குகளைத் தாக்க முடியும். இதன் தாக்கும் தொலைவு 400 கிலோமீட்டர்கள். அதிகபட்சமாக மணிக்கு 17,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த S-400 டிரையம்ப் அமைப்பு ஒரே நேரத்தில் 72 ஏவுகணைகளை ஏவும் திறன் பெற்றது. ஓர் இலக்குக்கு இரண்டு ஏவுகணைகள் என்ற விகிதத்தில் அதிகபட்சமாக 36 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது. இது 2007-ம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவத்தில் பயன்பாட்டிலிருந்து வருகிறது. தற்பொழுது ரஷ்யாவைத் தவிர வேறொரு நாடும் இதே அமைப்பைப் பயன்படுத்துகிறது. அந்த நாடு சீனா. இந்தியாவைப் போலவே சீனாவும் நட்பு நாடுதான் என்பதால் இதைச் சீனாவுக்குக் கொடுத்திருக்கிறது ரஷ்யா. எனவே, கடந்த 2014-ம் ஆண்டே இதை வாங்குவதற்குச் சீனா ஒப்பந்தம் செய்து விட்டது. ரஷ்யா முதலில் இந்த அமைப்பைக் கொடுத்த வெளிநாடு எது வென்று பார்த்தால் அதுவும் சீனாதான்.