வெளியிடப்பட்ட நேரம்: 22:33 (10/10/2018)

கடைசி தொடர்பு:22:33 (10/10/2018)

"என் மகனைத் தூக்கில் கூட போடுங்கள்; அப்பாவி மக்களை விட்டுவிடுங்கள்!" - குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் கதறல் #GujaratViolence

குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த வாரம் 14 மாத பெண் குழந்தை பீகாரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

குஜராத்

இந்தப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக குஜராத்துக்குப் புலம் பெயர்ந்துள்ள பலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலத்தவர்களைக் கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதற்கு பயந்து அங்கு வேலை செய்யும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை போன்ற பிற வழக்குகளில் சுமார் 150 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  

அதேநேரம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலம் சராண் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தொடர் வன்முறைச் சம்பவங்களால் குஜராத் மாநிலம் சட்டம் ஒழுங்கு பிரச்னையைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் குற்றவாளி தொடர்பான தகவல் இன்று அவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் அவரின் தாய் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``என் மகன் குற்றவாளி எனத் தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், அவன் செய்த தவற்றுக்குப் பீகார் மக்களைத் தண்டிக்க வேண்டாம். அவர்களை வெளியேற்ற வேண்டாம்" என ராமாவதி உருக்கமாகக் கூறியுள்ளார். மேலும், பேசிய அவன் தந்தை, ``என் மகன் ஒரு மைனர். சில நேரங்களில் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்போல நடந்துகொள்வான். குற்றம் செய்திருந்தால் அவனைத் தூக்கிலிடுங்கள். இரண்டு வருடங்களுக்கு முன் சொல்லாமல் கொள்ளாமல் நண்பர்களுடன் குஜராத் சென்றுவிட்டான். அவன் எங்கு சென்றுள்ளான் என்பதே கொஞ்ச நாள்களுக்கு முன்பு தான் எங்களுக்கே தெரியும்" எனக் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க