வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:07:58 (11/10/2018)

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் - பிரான்ஸ் ஊடகத்தின் தகவலால் மீண்டும் சர்ச்சை!

ரஃபேல் விமானம் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், மற்றொரு புதிய தகவலை பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானம்

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசுதான் வலியுறுத்தியது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப, அனில் அம்பானிக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்திய பங்குதாரராக ரிலைன்ஸ் நிறுவனம் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகவேண்டுமெனில், இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், டசால்ட் நிறுவன ஆவணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ரஃபேல் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பிரான்ஸ் பத்திரிகையின் இந்தத் தகவல் மற்றுமொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.