வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:07:54 (11/10/2018)

டெல்லியில் மத ரீதியாகப் பிரிக்கப்படும் பள்ளி மாணவர்கள் - விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித் துறை!

வடக்கு டெல்லி மாநகராட்சிப் பள்ளியில், மாணவர்களை மத ரீதியில் தனித்தனியே பிரித்துவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகார்களைத் தொடர்ந்து, 'உரிய விசாரணை நடத்தப்படும்' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மாணவர்கள்

டெல்லியில் உள்ள வடக்கு, கிழக்கு, தெற்கு  மாநகராட்சிகளின் சார்பில், 'மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகள்' நடத்தப்பட்டுவருகின்றன. இதில், டெல்லி வஜிராபாத்தில் உள்ள என்.டி.எம்.சி ஆண்கள் ஆரம்பப் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் என மத ரீதியில் பிரித்து வகுப்பறையில் சேர்க்கப்படுவதாக, ஆங்கில பத்திரிகைச் செய்தி ஒன்று வெளியானது.

இந்தச் செய்தியின் எதிரொலியாக, 'பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் மத வேறுபாடுகளைத் திணிக்கக் கூடாது' என இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறிய, என்.டி.எம்.சி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ''புகாருக்கு உள்ளான பள்ளியில், மூத்த கல்வி அதிகாரி விசாரணை நடத்த உள்ளார். புகாரில் கூறிய குற்றச்சாட்டு உண்மையெனில், இந்தப் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.