வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (11/10/2018)

கடைசி தொடர்பு:08:44 (11/10/2018)

பேரிடர்களால் இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு - அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை!

இயற்கைப் பேரிடர்களால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா சுமார் 80 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாக ஐ.நா-வின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியா

பருவ நிலை மாற்றங்கள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது.  சமீபத்தில், கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை, மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியால், கேரள மாநிலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது. ஏராளமான மக்கள் தங்களது உறவுகளை, உடைமைகளை இழந்து தவித்துவருகின்றன. கேரளாவில் இது மழைக்காலம்தான். ஆனால், வழக்கத்தை விட மூன்று மடங்கு மழை கொட்டித்தீர்த்ததால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த நிலையில், ஐநா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இயற்கைப் பேரிடர்களால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 80 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1998 - 2017 வரை இந்தியா சந்தித்துள்ள பேரிடர்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர்களால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வதாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களில், 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4.4 பில்லியன் மக்கள்  காயங்களாலும், வீடுகளையும் இழந்தும் தவிக்கின்றனர். பேரிடரால் ஒவ்வொரு வருடம் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். 100 கோடி மதிப்பிலான சொத்துகள் அழிந்துபோகின்றன.  கடந்த 20 ஆண்டுகளில், உலக அளவில் பேரிடரால் ஏற்பட்டுள்ள இழப்பு, சுமார் 3 ட்ரில்லியன் ஆகும்.

1978 - 1997 காலகட்டங்களில் பேரிடரால் ஏற்பட்ட இழப்பை விட, கடந்த 20 ஆண்டுகளில் அதிக இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன. பூகம்பங்கள் மற்றும் சுனாமியால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம், புயல் மற்றும் வறட்சியால் பொருளாதார இழப்பு மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.