வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (11/10/2018)

கடைசி தொடர்பு:16:24 (11/10/2018)

’#MeToo இயக்கம் சமூக வலைதளங்களோடு நின்றுவிடக் கூடாது!’ - தேசிய மகளிர் ஆணையம்

வலிகளுக்கான மதிப்பு அவ்வளவுதானா... இதன்மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதா என்கிற இயல்பான கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.

’#MeToo இயக்கம் சமூக வலைதளங்களோடு நின்றுவிடக் கூடாது!’ - தேசிய மகளிர் ஆணையம்

மூக வலைதளங்களில் #MeToo டிரெண்ட் ஆவது இதோடு மூன்றாவது முறை. தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் வன்கொடுமை குறித்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையபேர் பதிவுசெய்து வருகிறார்கள். செய்தி ஊடகம், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எனப் பல துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள்மீது இந்தக் குற்றச்சாட்டின் கறைகள் படிந்துள்ளன. டெல்லி நிர்பயா சம்பவத்தின்போது கறுப்புச்சட்டை அணிந்து போராடிய சிலர், 'தமிழக ஆளுநர் ஒரு பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டினார்' என்கிற செய்தி வெளியானபோது, அவருக்கு எதிராக ட்விட்டரில் கவிதை மொழியில் ட்வீட் செய்த முக்கியப் பிரமுகர்கள், மத்திய மந்திரி சபையில் இருப்பவர்கள் எனப் பலர் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளில் தற்போது அடக்கம். இங்கே இருக்கும் 99 சதவிகிதப் பெண்களுக்கு நிச்சயம் ஒரு #MeToo கதை இருந்திருக்கும். இத்தனை நாள் மௌனமாக இருந்தவர்களும், 'இனிமேலும் மௌனம் காக்க முடியாது' என்று #MeToo பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்கள். அவர்களது உடைத்துப் பேசும் தைரியம் குறித்துப் பாராட்டப்படுகிறார்கள். வரவேற்கத்தக்கதே! அடக்கிவைத்த வலிகள் என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறும்தானே?! சிதறும் அத்தனை வலிகளையும் உணரமுடிகிறது. ஆனால், இத்தகைய சமூக வலைத்தளப் பதிவுகளின் தாக்கம் அதிகபட்சம் என்னவாக இருக்கும்? அடுத்த சர்ச்சை ஒன்று முகநூல் மற்றும் ட்விட்டரை ஆக்கிரமிக்கும்வரை மட்டுமே இதுகுறித்தான விவாதம் நிலைத்திருக்கும். சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான பிரச்னைகளின் உயிர்ப்பு, அடுத்த பெரும்பிரச்னை ஊடகங்களை ஆக்கிரமிக்கும்வரை மட்டுமே. இப்படிப் பகிரப்படும் அத்தனை வலிகளையும் அதுபோலவே கடந்துபோக வேண்டுமா... அந்த வலிகளுக்கான மதிப்பு அவ்வளவுதானா... இதன்மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதா என்கிற இயல்பான கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன. உண்மையிலேயே இதுபோன்ற தங்களது வலிகளை இணையத்தில் பதிவுசெய்வதால் MeToo குறித்து சுதா ராமலிங்கம்அவர்களுக்குச் சட்டப்படி ஏதேனும் உதவி கிடைக்குமா? 

"கிடைக்காது... ஒருவேளை, அவர்கள் இந்தக் குற்றங்கள் குறித்து நேரடியாகக் காவல் நிலையங்களில் சென்று பதிவுசெய்தால் மட்டுமே அவர்களுக்கான பதில் கிடைக்கும்" என்கிறார், காவல் துறை கூடுதல் ஆணையாளர் கணேசமூர்த்தி.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசுகையில், “#MeToo  இயக்கம் வரவேற்கப்படவேண்டியதே. குறிப்பாகப் பெண்களுக்கு, தங்களுடைய வலிகளைக் கொட்டித் தீர்ப்பதற்காக ஏதோ ஓர் இடம் கிடைத்திருக்கிறது. இதுநாள்வரை மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஆதாரப் பூர்வமாகப் போலீஸில் புகார் அளித்தால் மட்டுமே அதன்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்” என்று கூறியிருக்கிறார். தேசிய பெண்கள் ஆணையம்

தேசியப் பெண்கள் ஆணையம் மட்டும் இந்த இயக்கம் குறித்து தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, "இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களுக்கு எதிராக அமைதியாகவே இருந்துவரும் நீண்டகால நாகரிகம் தற்போது உடைத்தெறியப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு அத்தனை வகையிலும் உதவ, தேசியப் பெண்கள் ஆணையம் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே இதுகுறித்துப் பதிவு செய்திருந்த சந்தியா மேனன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை நாங்கள் தொடர்புகொண்டிருக்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எங்கள் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இந்த இயக்கம் சமூக வலைத்தளங்களோடு நின்றுவிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார். 

#MeToo பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கட்டும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்