வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:12:20 (11/10/2018)

`3 தலைமுறையாகத் தேடினோம்!' - வைரம் கிடைத்த சந்தோஷத்தில் கூலித் தொழிலாளி!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பன்னா நகரத்தில் வைரச் சுரங்கம் செயல்பட்டுவருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வைரச் சுரங்கமான இங்கு, வைரங்கள் குறைவான ஆழத்திலேயே கிடைக்கும். தனி நபர்கள் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, வைர வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். மேலும், பன்னாவில் உள்ள உள்ளூர் வாசிகள், வைர  வேட்டையில் ஈடுபடுவது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.  அரசாங்கமே அவர்களுக்கு 25 சதுர மீட்டர் நிலத்தை குத்தகைக்குக் கொடுத்துள்ளது.

வைரம்

அந்த வகையில், வைர வேட்டையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி மோதிலால் பிரஜாபதி (30 ) என்பவருக்கு, 42.9  காரட் வைரம் கிடைத்துள்ளது.  இதன் மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். பன்னா நகர வரலாற்றிலேயே 2-வது அதிக எடையுடைய வைரக் கல் இதுவாகும். இதற்கு முன்னர், 1961-ம் ஆண்டு 44 .55  காரட் கொண்ட மிகப்பெரிய வைரம் ஒன்று கிடைத்தது.

பன்னா மாவட்ட வைரத்துறை அதிகாரி சந்தோஷ் சிங்க் இது பற்றிக் கூறுகையில், `சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இந்த வைரம் முறைப்படி ஏலத்தில் விடப்படும்' என்று தெரிவித்துள்ளார். சட்டப்படி மத்தியப்பிரதேச மாநில ராயல்டி,11.5 சதவிகித பணமும் வரியும் பிடித்தம் போக மீதிப் பணம் மோதிலாலுக்கு வழங்கப்படும்.

தொலைக்காட்சி பேட்டிகளில் ஆரவாரித்துப் பேசிய மோதிலால், " நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். நாங்கள் மூன்று தலைமுறையாக வைரத்தைத் தேடுகிறோம். என்னை கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார். இதைக்கொண்டு நான் என் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொள்ளுவேன்" என்று கூறியுள்ளார்.