வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (11/10/2018)

கடைசி தொடர்பு:13:34 (11/10/2018)

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! 5 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி இழப்பு

இன்றைய தினம் (11.10.2018) வியாழக்கிழமை, இந்திய பங்குச் சந்தையில் விற்பனை தொடங்கிய ஐந்தே நிமிடங்களில், பெரிய சரிவைச் சந்தித்ததில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இன்றைய தொடக்க விற்பனையிலேயே மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பில், ரூ.134.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தை

தேசிய பங்குச் சந்தையில் 307 புள்ளிகள் சரிந்து, 10154 புள்ளிகளாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் 1,029 புள்ளிகள் சரிந்து, 33,732 புள்ளிகளாக இருந்தது. பின்னர், தேசிய பங்குச் சந்தை அதிலிருந்து மீண்டு 10,200 புள்ளிகளுக்கு வந்தது. ஆனால், மும்பை பங்குச் சந்தை 800 புள்ளிகள் இழப்பிலேயே தொடர்கிறது.

இந்தச் சரிவு, ஆசிய அளவிலும் பல்வேறு பங்குச் சந்தைகளில் காணப்பட்டது. தைவான் பங்குச் சந்தை 5.21 சதவிகிதமும், ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை 3.7 சதவிகிதமும், கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை 2.9 சதவிகிதமும் சரிவைக் கண்டன. இதேபோல, சர்வதேச அளவில் பல்வேறு பங்குச் சந்தைகளும் இன்று இழப்பைச் சந்தித்துள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிவருவதும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துவருவதும் இன்றைய சரிவுக்கு முதன்மையான காரணமாக, பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.