வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (11/10/2018)

கடைசி தொடர்பு:14:49 (11/10/2018)

வலுப்பெறும் #MeToo இயக்கம்! - நானா படேகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு

இந்தியாவில் # MeToo இயக்கம் வலுப்பெற்று வருகிறது. பாலிவுட்டில் # MeToo ஹேஷ் டாக் ட்ரெண்ட் ஆக ஏதோ ஒரு விதத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் நடிகை தனுஸ்ரீ தத்தா தான்.  தற்போது அவர்  சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். பாலிவுட் மூத்த நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ கொடுத்த பாலியல் புகாரைத் தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

தனுஸ்ரீ
 

தனுஸ்ரீ தரப்பில் முன்வைக்கும் புகார்..

 `2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' ( Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நடனம் ஆட கற்றுக்கொடுப்பதுபோல் தகாத இடங்களில் கை வைத்தார். நடன இயக்குநரிடம் சொல்லி என்னோடு நெருக்கமாக இருக்கும்படியான ஸ்டெப்ஸ் வைக்கச் சொன்னார். ஆனால், அதற்கு மறுத்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என அனைவரிடமும் முறையிட்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் நானா-வுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஒருகட்டத்தில் நான் வலுக்கட்டாயமாக அடியாட்களால் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.’ 

இதுதான் தனுஸ்ரீ முன்வைத்த புகார். ஆனால், இந்த விவகாரத்தில் `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் இயக்குநர் ராகேஷ் சரங், நடன இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருமே நானா-வுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். `அன்றைய நாள் படப்பிடிப்பு செட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் எப்படி நானா பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும்?’ என்பதே நானா படேகர் தரப்பு வாதம்.

நானா படேகர்
 

இதனிடையே மற்ற பாலிவுட் பிரபலங்களும் தாங்கள் கடந்து வந்த சில கசப்பான அனுபவங்களை ட்விட்டரில் # MeToo ஹேஷ் டாக்கின் கீழ் பகிரத் தொடங்கினர். இதையடுத்து தனுஸ்ரீயின் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. தனுஸ்ரீ ஏன் இதுவரை நானா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா நேற்று தனது வழக்கறிஞருடன் ஒஷிவாரா காவல்நிலையத்துக்குச் சென்றார். அங்கு நடிகர் நானா படேகர், உள்ளிட்ட 5 பேர் மீது எழுத்து பூர்வ புகார் மனு கொடுத்தார். போலீஸார், நானா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அதன்படி நானா படேகர், `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் தயாரிப்பாளர் சாமி சித்திக் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க