வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:20 (11/10/2018)

`அவர்களிடம் முழு மனிதநேயத்தையும் பார்த்தேன்’ - நெகிழும் கௌதம் கம்பீர்

மரபணு தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்து வரும் பெற்றோர்களைப் பாராட்டி ‘அவர்களிடம் நான் முழு மனித நேயத்தையும் பார்த்தேன்’ என கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நெகிழ்ந்துள்ளார். 

கம்பீர்

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உதவும் வகையில் ‘லட்சத்தில் ஒருவர் டச் ஆஃப் கேர்’ (One In A Million #TouchOfCare) என்ற பிரசாரத்தை விக்ஸ் குழுமம் நடத்தி வருகிறது. தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிஷா லோபோ என்ற சிறுமிக்கு உதவும் வகையில் நேற்று மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நடிகை ஸ்ரேயா சரண் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதான சிறுமி நிஷா லோபோ பிறக்கும்போதே மரபணு தோல் நோயால் பாதிக்கப்பட்டுப் பிறந்தவர். இவர் பிறந்தவுடன் அவளின் பெற்றோர் சிறுமியைக் காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளனர். நிஷா காப்பகத்துக்கு வந்த அடுத்த இரண்டு வாரங்களில் டேவிட் லோபோ மற்றும் அலோமா என்ற தம்பதி சிறுமியைத் தத்தெடுத்து தற்போது வரை வளர்த்து வருகின்றனர். சிறுமியின் சவாலான வாழ்க்கை மற்றும் அவளை வளர்க்கும் பெற்றோர் குறித்த குறும்படம் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. 

நிஷா மற்றும் அவளின் பெற்றோர் குறித்து கௌதம் கம்பீர் தன் ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார். அவர் பதிவில், `` லோபோ போன்ற பெரிய மனதுடையவர்களை நான் காண்பது மிகவும் அரிதான விஷயம். அந்தத் தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தும் அவர்கள் மூன்று பெண் குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளனர். முழு மனிதநேயத்தையும் நான் அவர்களிடம் பார்த்தேன். நிஷா, தான் ஒரு ஆசிரியர் ஆகவேண்டுமென ஆசைப்படுகிறாள். இந்த உலகத்துக்குப் பல விஷயங்களைக் கற்பித்து, அவள் தற்போதே ஆசிரியராகத்தான் உள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.