வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (11/10/2018)

இந்தியப் பங்குச்சந்தையின் திடீர் சரிவுக்குக் காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

இன்று, இந்தியப் பங்குச்சந்தையின் தொடக்கம், முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் 1000 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

வ.நாகப்பன்கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்தோடிருந்த சந்தையில் இன்றைய சரிவுக்கு என்ன காரணமாக இருக்குமென்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``இன்றைய சரிவை மட்டுமே தனித்துப் பார்க்கக் கூடாது. ஓரிரு மாதங்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் பங்குச்சந்தை சரிவின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டும். கடந்த ஓராண்டாகவே நிறுவனங்களின் செயல்பாடுகளைவிட அவற்றின் மதிப்பை சந்தை உயர்வாகவே மதிப்பீடு செய்துவைத்திருந்தது. அத்தகைய அதிக மதிப்பீடு தற்போது தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது. 

பங்குச்சந்தையில் இது சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றே. பங்குச்சந்தை ஏறும்போது மெல்ல மெல்ல ஏறும், ஆனால், இறங்கும்போது சற்று விரைவாகவே இறங்கும். இந்த இறக்கம் இன்னும்கூட 10 - 15% வரை தொடரக்கூடும். அப்போதுதான் இது சரியான மதிப்பீட்டுக்கு வரும். அப்போதும்கூட அதையும் தாண்டி கீழே இறங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், நியாயமில்லாத அளவுக்கு பங்குச்சந்தை ஏறியதுபோல நியாயமில்லாத அளவு இறங்கவும் செய்யும். இப்போதே சில நல்ல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு வந்துள்ளதால் அவற்றில் குறைந்த அளவுக்கு பிரித்து முதலீடு செய்யலாம்" என்றார்.     ரெஜி தாமஸ்

இந்திய பங்குச்சந்தையின் திடீர் சரிவு குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் குறிப்பிடும்போது, ``ஏற்கெனவே இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இதற்கான காரணங்களில் ஒன்றாக உலக அளவில் அமெரிக்கா சீனா இடையே நடைபெறும் வர்த்தகப்போரும் ஒன்றாகும். இச்சூழலில், அமெரிக்காவில் உளவு பார்த்ததற்காக சீனாவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியை கைது செய்யும்படி அமெரிக்க நீதித்துறை நேற்று உத்தரவிட்டது. அமெரிக்க விமானம் மற்றும் விண்வெளி நிறுவனங்களிலிருந்து பொருளாதாரம் சார்ந்த ரகசியங்களை திருடுவதற்கு முயற்சிக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த கைது சம்பவம், அமெரிக்க சீன உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துமென்ற பதற்றம் நிலவியதால் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" என்றார்.