வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:09 (11/10/2018)

சந்தையில் மீண்டும் கடும் சரிவு! 11.10.2018

கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாள்கள் பெருத்த நஷ்டத்துடன் முடிந்தபின், திங்களன்று சிறிது சுதாரித்து, செவ்வாயன்று சரிந்து, புதன் கிழமை சற்று முன்னேறினாலும், முதலீட்டாளர்கள் மனநிலையில் பெரிதாக எந்தப் பாசிட்டிவான மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த விஷயம் இன்று நிதர்சனமாக வெளிப்பட்டது. 

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று 759.74 புள்ளிகள், அதாவது 2.19 சதவிகிதம் சரிந்து 34,001.15 என்ற நிலையில் முடிவுற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 1040 புள்ளிகள் சரிந்து 33,723.53 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 225.45 புள்ளிகள், அதாவது 2.16 சதவிகிதம் சரிந்து 10,234.65-ல் முடிந்தது.

உலகப் பொருளாதார வளர்ச்சிதான் முன்னர் எதிர்பார்த்ததைவிட இந்த ஆண்டு குறைவாகத்தான் இருக்கும் என்று தனது கணிப்பை இன்டெர்னேஷனல் மானிட்டரி ஃபண்ட் (IMF) இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டதிலிருந்து உலகத்தில் உள்ள பல சந்தைகள் இறங்குமுகமாகவே இருக்கின்றன. 

நேற்று அமெரிக்கச் சந்தை கடும் வீ ழ்ச்சியைக் கண்டதைத் தொடர்ந்து இன்று ஆசிய சந்தைகளும் பின்னர் ஐரோப்பிய சந்தைகளும் சரிந்திருக்கின்றன. 

அமெரிக்க - சீன வர்த்தக பூசல் காரணமாகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்தும், அமெரிக்க வட்டி விகித உயர்ச்சியால் அரசுப் பாத்திரங்களின் மூலமான வருவாய் அதிகரிப்பதால் பங்குச் சந்தைகளில் உண்டாகக்கூடிய சரிவுகள் குறித்தும் ஏற்பட்டிருக்கும் கவலையின் காரணமாகப் பங்குகளின் விலைகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன.

கச்சா எண்ணெய் விலை இரண்டு வாரத்திய லோ-வை எட்டியிருப்பதும், டாலருக்கெதிராக இந்திய ரூபாய் சற்று ரெகவர் ஆகியிருப்பதும், சந்தை இன்று இதற்கும் மேலும் சரியாமல் இருந்தது எனக் கூறலாம்.

உலோகம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், வங்கி, ஆட்டோமொபைல்,டெலிகாம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெருத்த நஷ்டமடைந்தன. எண்ணெய் துறை பங்குகள், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்ததனால் முன்னேற்றம் கண்டன.

இன்று மிகவும் விலை சரிந்த சில பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 8.70%
பஜாஜ் ஃபைனான்ஸ் 6%
ஸ்டேட் பேங்க் 5.7%
டாடா ஸ்டீல் 4.6%
ஹிண்டால்கோ 4.5%
பஜாஜ் ஃபைனான்ஸ் 4.5%
வேதாந்தா 4.4%
மஹிந்திரா & மஹிந்திரா 4.4%
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், JSW ஸ்டீல், இன்ஃபோசிஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சிப்லா, டாடா கன்சல்டன்சி சர்விசஸ் மற்றும் ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் பங்குகள் 3 முதல் 4 சதவிகிதம் வரை சரிந்தன.

 இன்று மும்பை பங்குச் சந்தையில் 819 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1765 பங்குகள் விலை சரிந்தும், 147 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.