வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:39 (11/10/2018)

சபரிமலை விவகாரமும்.. நாடாளுமன்றத் தேர்தலும்! கேரளப் பிரளயம்

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க தேசியத் தலைமை, தீர்க்கமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், கேரளத்தில் பா.ஜ.க இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டம் நடத்துகிறது.

சபரிமலை விவகாரமும்.. நாடாளுமன்றத் தேர்தலும்! கேரளப் பிரளயம்

`சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவு மீது மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டை வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சி.பி.எம் கட்சிக்கு எதிராக இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர்.

சபரிமலை விவகாரம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பந்தளத்திலிருந்து திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்துக்குப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று காயங்குளம் வரையும், 12-ம் தேதி கொல்லம், 13-ம் தேதி கொட்டியம், 14-ம் தேதி களக்கூட்டம் வரை செல்கிறது. 15-ம் தேதி களக்கூட்டத்தில் தொடங்கி கேரளா தலைமைச் செயலகத்தைச் சென்றடைகிறது இந்தப் பேரணி. இவர்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க தேசியத் தலைமை, தீர்க்கமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், கேரளத்தில் பா.ஜ.க இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டம் நடத்துகிறது. அதுபோல காங்கிரஸ் கட்சியும் தெருமுனைக் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எனத் தங்கள் பங்குக்குப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ``சபரிமலை சன்னிதானம் பாதுகாப்புப் பணியில், பெண் போலீஸை நியமிப்பதற்குக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

sudakaran

இது பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஐயப்ப பக்தர்கள் நினைத்தால் சபரிமலையில் போலீஸும், பட்டாளமும் காலூன்றி நிற்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்களும், அரசுகளும் அல்ல. தந்திரிகளுடைய கருத்துதான் இறுதியானது. முந்தைய உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு சபரிமலையில் ஆசாரமும், நம்பிக்கையையும் சிதைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், பெண்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு சி.பி.எம். அரசு நீதிமன்றத்தில் இந்த விதியைக் கேட்டு வாங்கி இருக்கிறது. சபரிமலையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கேரள பா.ஜ.க.வினர் போராட்டங்கள் நடத்தும் முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்படி கோரிக்கை வைக்கட்டும். அதைவிட்டுவிட்டு பக்தர்களின் ரத்தத்தின் மீது ஓட்டு அரசியல் செய்ய வேண்டாம்" என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

kadakampalli

பெண்களுக்கும் சம உரிமை என்று கொள்கை சித்தாந்தம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தீர்ப்பு மீது சீராய்வு மனுத்தாக்கல் செய்யத் தயாராக இல்லை. `பெண் பக்தர்கள் வந்தால் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்துகொடுப்போம்' என்கிறது. 10 வயதுக்கு மேல் 50 வயதுக்கு உள்பட்ட பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்களா.. மாட்டார்களா என்பது இரண்டாம் பட்சம். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு பணிக்காக முன்கூட்டியே பெண் காவலர்களை சபரிமலை சன்னிதானத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. பெண் காவலர்களை சன்னிதானத்துக்கு அனுப்பக் கூடாது என்ற கோரிக்கை மறுபுறம் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீடு முன்பு பா.ஜ.க. இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ``பா.ஜ.க ஆன்மிகத்துக்காகப் போராட்டம் நடத்தவில்லை, அரசியலுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். இப்போதைய பா.ஜ.க போராட்டம், முன்பு நடந்த ரத யாத்திரையை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும்" என்றார்.

இது ஒருபுறம் இருக்க பந்தளத்தில் தேவசம் போர்டு அதிகாரிகள் சுதீஸ்குமார், முராரி ஆகியோரை அலுவலகத்துக்குள் வைத்து பா.ஜ.க.வினர் பூட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் விரைந்து சென்று அதிகாரிகளை மீட்டனர்.

பா.ஜ.க பேரணி நிறைவடையும் மறுநாளான 16-ம் தேதி திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு சி.பி.எம். ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலை தீர்ப்பு குறித்தும், எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்தப் பொதுக்கூட்டத்தை அமைக்க உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் சபரிமலை விவகாரம் அரசியலை நோக்கி நகர்கிறது.


டிரெண்டிங் @ விகடன்