வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:01:13 (13/10/2018)

கங்கையைச் சுத்தபடுத்த உண்ணாவிரதப் போராட்டம்! - கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்த சூழலியல் ஆர்வலர்

ஜிடி அகர்வால்

கங்கையைச் சுத்தப்படுத்தும் நோக்கில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி. அகர்வால், நேற்று உயிரிழந்தார். 87 வயதான ஜி.டி அகர்வால், கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 109 நாள்கள் உண்ணாவிரதம் இருந்துவந்தார். கங்கை ஆறு மிகவும் மாசுபட்டிருப்பதால், அதைப் பாதுகாப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி, கங்கோத்ரி முதல் உத்தரகாசி வரை அதைச் சுத்தப்படுத்தி,  நீர் தடையில்லாமல் ஓடுவதற்கு ஆரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இவரது கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. இவர், கான்பூர் ஐ.ஐ.டி-யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும், இவர் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் உறுப்பினராக இருந்தவர். உண்ணாவிரதம் இருந்த நாள்களில், அவர் தேன் கலந்த நீரை மட்டுமே அருந்தி வந்ததாகவும், அவரது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக அதை அருந்துவதையும் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர்.

கங்கை

பின்னர் அவர், ரிஷிகேஷில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் 1 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியானது. மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் ஜி.டி அகர்வாலின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். மேலும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குரல்கொடுத்து வருகிறார்கள். இவரது இறப்புக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.