வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:30 (12/10/2018)

''வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்' - அருண்ஜெட்லி பெருமிதம்!

'அடுத்த ஐந்தாண்டுகளில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்' என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அருண் ஜெட்லி

மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி ஏற்பாடுசெய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ''மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதற்கு முன், இந்தியாவில் வருமான வரிக் கணக்கு தாக்கல்செய்வோரின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, பி.ஜே.பி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட இந்த நான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

வரும் 5-வது ஆண்டில், இந்த எண்ணிக்கை 7.5 அல்லது 7.6 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதே விகிதத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதாவது, அரசாங்கத்தின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் மிக வேகமாக விரிவடையப்போகின்றன. எனவே, அதன் வளர்ச்சி நிலையாகுமா அல்லது குறைவாகுமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லை. நாட்டின் பொருளாதாரம் முறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் இதற்கான காரணம்!'' என்றார்.