வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (12/10/2018)

கடைசி தொடர்பு:11:35 (12/10/2018)

பப்ஜி கேமுக்குத் தடை! - பெற்றோர்-சகோதரியை குத்திக் கொன்ற இளைஞர்

இணைய விளையாட்டை விளையாடக் கூடாது என்று தடுத்ததால், இளைஞர் ஒருவர் தன் பெற்றோரைக் கொலைசெய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி

`Player’s Unknown Battle Ground' என்பதைச் சுருக்கமாக, `PUBG' என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இதுதான், அந்த விளையாட்டின் விதி. அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும். ஸ்மார்ட் போன்களில் பிரபலமாகியுள்ள இதற்கு அடிமையாகி, பல இளைஞர்கள் தங்களின் நேரத்தை வீணடித்துவருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா என்ற 19 வயது இளைஞரை, ` PUBG கேம் விளையாடக் கூடாது' எனப் பெற்றோர்கள் தடுத்ததால், அவர்களைக் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறை அதிகாரிகள், “இந்த விளையாட்டுக்கு அடிமையானதால்தான் 12-ம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளார் சுராஜ். இதற்காக அவரைக் கண்டித்துள்ளனர் பெற்றோர். பின்னர், டிப்ளமோ படிப்பில் அவரைச் சேர்த்துள்ளனர். அங்கும் சரியாக வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இதைவிடக் கொடுமை, பப்ஜி கேம் விளையாடுவதற்காக, மெஹ்ரவுலியில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அங்கு சென்று விளையாடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்த சுராஜின் சகோதரி, பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார். 

இதனால் கோபமடைந்த சுராஜின் பெற்றோர், மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து, தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். கடந்த புதன்கிழமை இரவு வழக்கம்போல வீட்டுக்கு வந்து, மிகவும் சாதாரணமாக இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில், தன் பெற்றோரின் அறைக்குச் சென்ற சுராஜ், அவரது தந்தையைப் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அருகில் இருந்த தாயையும் குத்திக் கொன்றுவிட்டார். அடுத்து, சகோதரியின் அறைக்குச் சென்று அவரையும் கொலை செய்துவிட்டுத் தடயங்களை அழித்திருக்கிறார். பின்னர், வீட்டில் திருட்டு நடந்ததுபோல அனைத்தையும் செட் செய்திருக்கிறார். பக்கத்து வீட்டாரிடமும் திருடன் வந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது வீட்டில் அனைத்துப் பொருள்களும் உடைந்து கிடந்தன. சுராஜை மட்டும் ஏன் திருடன் கொலை செய்யவில்லை என சந்தேகம் வந்தது. தொடர்ந்து நடந்த தடயவியல் சோதனையில், சுராஜ் தடயங்களை அழிக்க முயன்றதைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

`பெற்றோரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சுராஜுக்கு அனுமதி வழங்கக் கூடாது' என அவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களது இறுதிக் காரியங்களை உறவினர்களே செய்துமுடித்துள்ளனர். சிறையில், ‘என்னை சட்டத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்பதை மட்டுமே சுராஜ் தெரிவித்துவருவதாகக் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு விளையாட்டுக்கு அடிமையாகி, இளைஞர் ஒருவர் பெற்றோரைக் கொலைசெய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.