வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:08 (12/10/2018)

`எமர்ஜென்சிக்குத்தான் லீவு; பணி நாள்களில் கிடையாது!'- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் முதல் அதிரடி

கடந்த அக்டோபர் 3-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவிக்கு வந்ததும், அதிகார முடிவுகளை எடுக்கும் முன், வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுடனும் கலந்து ஆலோசித்த அவர், அதிரடியாக சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

தலைமை நீதிபதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி நீதிமன்றப் பணி நாள்களில் நீதிபதிகள் எமர்ஜென்சி விஷயங்களுக்காக மட்டுமே விடுமுறை எடுக்க வேண்டும் எனவும், அது இல்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றப் பணி நாள்களில் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது எனவும், எல்டிசி விடுமுறை எனப்படும், குடும்பத்தினரோடு சுற்றுலா செல்லும் விடுமுறையும் இனி நீதிமன்றப் பணி நாள்களில் எடுக்கத் தடை விதித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில், இரண்டு கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள  தலைமை நீதிபதி, இந்தப் புதிய விதிகளைக் கடைப்பிடிக்காத நீதிபதிகள்குறித்து உடனடியாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் புகார் அளிக்க வேண்டும் எனவும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தவறுசெய்யும் நீதிபதிகளிடம் இருக்கும் நிலுவை வழக்குகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள ரஞ்சன் கோகோய், உடனடியாக நீதிபதிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.