வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:03 (12/10/2018)

``துப்பாக்கி எடுத்தான் இப்போது மடிந்தான்'' - பி.ஹெச்.டி தீவிரவாதியின் தந்தை கண்ணீர்

ப்சல் குரு தூ்க்கிலிடப்பட்டபோது துப்பாக்கியை எடுக்க ஆரம்பித்த மன்னான் வானி இப்போது கொல்லப்பட்டுவிட்டான் என்று அவரின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

தீவிரவாதி மன்னான் வானி

வடக்கு காஷ்மீரின் குப்வார பகுதியில் உள்ள திகிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னான் வானி. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜியாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடந்த ஜனவரி மாதத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். இந்நிலையில், சத்குண்ட் என்ற கிராமத்தில் மன்னான் வானி பதுங்கியிருப்பதாகப் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. மன்னான் வானி பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றிய போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர். மற்றொரு தீவிரவாதி ஆஷிக் சர்காரும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார். மன்னான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. திகிபுரா கிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மன்னான் வானியின் தந்தை பஷீர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மகன் கொல்லப்பட்டதும் உடைந்த குரலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அப்சல் குரு தூக்கிலிட்டபோது அலிகாரில் இவன் இருந்தான். என்னிடம் போனில் மிகவும் ஆவேசமாகப் பேசினான். என் மகன் அப்போதிருந்துதான் மாறத் தொடங்கினான். துப்பாக்கியை இவர்கள் ஏன் கையில் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. காஷ்மீர் சுடுகாடாக மாறி வருகிறது. காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்றார். 

மன்னான் வானி மத்திய அரசு நடத்தும் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்தவர். நன்றாகப் படிக்கக்கூடியவர். கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் ஜியாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்ற பின், அலிகார் பல்கலையில் பிஹெச்.டி பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போனார். மூன்று மாதங்களுக்கு முன், ஃபேஸ்புக்கில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட மன்னான் வானிக்கு இரங்கல் கூட்டம் நடத்த முயன்றதாக 3 மாணவர்களை அலிகார் பல்கலைக்கழகம் சஸ்பெண்டு செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க