வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:22 (12/10/2018)

ரூபாயின் உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவால் சந்தையில் முன்னேற்றம் 12.10.2018

சென்ற தினத்தின் கடும் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தக நேரம் தொடங்கியது முதல் இறுதி வரை, இன்று சந்தை பாசிட்டிவ் திசையிலேயே பயணித்தது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் இன்று 461.42 புள்ளிகள், அதாவது 1.35 சதவிகிதம் உயர்ந்து 34,760.89 என்ற நிலையில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 159.05 புள்ளிகள், அதாவது 1.54 சதவிகிதம் உயர்ந்து 10,460.10-ல் முடிந்தது.

சமீபத்திய சரிவுகளுக்குப் பின், பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் வாங்கத் தூண்டும் அளவிலான விலைகளில் கிடைக்கிறதென்பது பல முதலீட்டாளர்களை மீண்டும் சந்தையில் உற்சாகமாகப் பங்கேற்க வைத்தது எனலாம்.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகளுக்கு மேல் உயர்ந்தது, சந்தையில் இன்று நிலவிய உற்சாக நிலைக்கு முக்கியக் காரணம்.

ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் காணப்பட்ட பாசிட்டிவான போக்கு. 

அமெரிக்காவில் கடந்த வாரம் எண்ணெய் இருப்பு அதிகமாக இருந்ததால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, சந்தைக்கு நல்ல சாதகமான விஷயமாக அமைந்தது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை பங்குகளைத் தவிர ஏனைய துறைகளின் பங்குகள் இன்று பெரும்பாலும் முன்னேற்றம் கண்டன. ஆட்டோமொபைல் , ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் வங்கித்துறை பங்குகள் நல்ல லாபத்துடன் முடிந்தன.

இன்று விலை அதிகரித்த சில பங்குகள் :

எய்ச்சேர் மோட்டார்ஸ் 7.5%
மாருதி சுசூகி 5.9%
பஜாஜ் ஃபைனான்ஸ் 5.8%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 5.4%
மஹிந்திரா & மஹிந்திரா 5.3%

கோடக் பேங்க், JSW  ஸ்டீல், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், யு.பி.எல், இந்தஸ் இந்த் பேங்க், பாரத் பெட்ரோலியம், ஐ.டி.சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி, யெஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமென்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் கெயில் இந்தியா பங்குகள், 2.3 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை உயர்ந்தன.

 இன்று மும்பை பங்குச்சந்தையில் 2043 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 628 பங்குகள் விலை சரிந்தும், 147 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.