வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:02:00 (13/10/2018)

இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி; இந்தியா மீது ட்ரம்ப் சாடல்

இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முயல்வது `பயனற்றது' என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடு இரான். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இரானிலிருந்து இந்தியாவுக்கு 8.1 மில்லியன் டன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

ட்ரம்ப்

வரும் நவம்பர் மாதத்தில் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிலுள்ள இரண்டு சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்துள்ளதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். ஆனால், இரான் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத்தடை வரும் நவம்பர் 4-ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இச்சூழலில் இந்தியா இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. அதனால்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், `உண்மை நண்பன்' என்று ட்ரம்ப்பால் புகழப்பட்ட மோடி, தற்போது ட்ரம்புக்கு எதிராளியாகத் தெரிகிறார். இதற்கிடையே, இரானிலிருந்து இறக்குமதி செய்வது குறைந்தால் அதைச்சரிக்கட்ட, சவுதி அரேபியாவிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடாகி வருகிறது.