வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (13/10/2018)

கடைசி தொடர்பு:08:54 (13/10/2018)

'ஒவ்வொரு முடிக்கும் ஒரு விலை!' தூரிகைக்காகக் கொல்லப்படும் கீரிப்பிள்ளைகள்

உயிர் விலைமதிப்பற்றது என்பதெல்லாம் வெறும் வார்த்தைக்கு மட்டுமே இங்கே பயன்படுகிறது. உண்மையில், உலகில் இருக்கிற ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லா உயிருக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

'ஒவ்வொரு முடிக்கும் ஒரு விலை!' தூரிகைக்காகக் கொல்லப்படும் கீரிப்பிள்ளைகள்

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலுக்கு அடுத்து உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோத பொருள்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது விலங்குகள். அதிலும் உயிரோடு இருக்கிற கீரியை பிடித்து அதன் முடிகளை மட்டும் எடுத்துவிட்டு உடலை வீசிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். எடுக்கப்பட்ட முடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பெயின்டிங் பிரஷ்களின் விலை பல ஆயிரங்களைத் தொடுகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் Sherkot நகரில் கடந்த ஒன்றாம் தேதி 145 கிலோ கீரி முடியும், கீரியின் முடியால் தயாரிக்கப்பட்ட 56,000 பெயின்ட்டிங் பிரஷ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கடத்தலில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கடத்தலுக்கு மூலகாரணமாக இருந்தவர்களைத் தேடி வருகிறார்கள். ஒரு கீரியின் உடலில் இருந்து 50 கிராம் அளவிற்கு முடிகளை எடுக்கிறார்கள். 145 கிலோ அளவிற்குக் கீரியின் முடிகளைக் கடத்தியிருக்கிறார்கள் என்றால் கொல்லப்பட்ட கீரிகளின் எண்ணிக்கை சுமார் 10,000-க்கும் மேல். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி கொச்சியில் கீரி முடியால் தயாரிக்கப்பட்ட14,000 பெயின்ட்டிங் பிரஷ்களை வனத்துறையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பிரஷ்கள் அனைத்தும் உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

கீரி

வைல்ட் லைப் டிரஸ்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு  2000-ம் ஆண்டு வெளியிட்ட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 50,000 கீரிகள் கொல்லப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கலாம். கீரி இந்திய வன விலங்கு சட்டம் 1972 கீழ் அழிந்து வரும் உயிரினங்களின் இரண்டாவது  பட்டியலில் இருக்கிறது. இவற்றைப் பிடிப்பதும், அவற்றைத் தாக்குவதும் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கடத்தல்காரர்கள் பயப்படுவதாக இல்லை. கீரியின் முடியால் தயாரிக்கப்படும் தூரிகைகளுக்கு சட்டவிரோதமான கறுப்பு சந்தையில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெயின்ட்டிங் பிரஷ்கள் சீனா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், கீரியின் முடியை விமான நிலையங்களில் இருக்கிற ஸ்கேன் செய்கிற இயந்திரங்களால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் எளிதாக முடியைக் கடத்திவிடுகிறார்கள். 

பெயின்ட்டிங் பிரஷ் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் சட்ட விரோதமாகப் பெறுகின்றனர். கீரிகளைப் பிடிக்க பல்வேறு வழிமுறைகளைக் கடத்தல்காரர்கள் பின்பற்றுகிறார்கள். சுருக்கு வைப்பது, பொறி வைத்துப் பிடிப்பது போன்ற பல்வேறு வழிகளில் இவற்றைப் பிடிக்கிறார்கள். பிடிபடுகிற குட்டிகளை கடத்தல்காரர்கள் கொன்றுவிடுகிற துயர சம்பவங்களும் நிகழ்கின்றன. 

வேட்டையாடப்படும் விலங்குகள் - Vikatan Infographics

வெவ்வேறு நோக்கங்களுக்காக ஓவியக் கலைஞர்கள் வெவ்வேறு தூரிகைகளைப் பயன்படுத்துகின்றனர். இயற்கையில் கீரியின் முடி கடுமையானது, அதன் முடிகளைக் கொண்டு ஓவியம் வரையும் பொழுது தடிமனான எண்ணெய் வண்ணத்தை (ஆயில் பெயின்ட்டிங்) பரப்புகிறது. இதனால் உலகம் முழுவதும் கீரியின் முடியால் தயாரிக்கப்படுகிற தூரிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான கடத்தல் வர்த்தகம் 19 பில்லியின் டாலர் அளவுக்கு நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கருப்பு மாம்பா, ராஜ நாகம் என உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளை சில நிமிடங்களில் கொன்று தின்றுவிடும் கீரியை, சில நொடிகளில் கொன்றுவிடுகிற மனிதன் எவ்வளவு பெரிய கொடூரனாக இருப்பான்?  சுற்றுச்சூழலுக்கு எதிராக மனித இனம் போராடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டம்தான் உலகின் மிகவும் மோசமான காலகட்டம்!