வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:26 (13/10/2018)

துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள்... பதறிய வாடிக்கையாளர்கள்... பறிபோன கேஷியர் உயிர்!

டெல்லியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் கொள்ளையடிப்பதற்காக நுழைந்த மர்ம நபர்கள், 6 பேர் சுட்டதில் வங்கி கேஷியர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொள்ளை

டெல்லி கைரா கிராமப் பகுதியில், கார்ப்பரேஷன் வங்கி இயங்கிவருகிறது. இந்த வங்கியில் நேற்று மாலை 4 மணிக்கு, முகத்தில் துணியைக் கட்டியவாறு இரண்டு டூ வீலரில் வந்த 6 பேர், வங்கியின் உள்ளே ஒருசேரப் புகுந்தனர். அவர்கள் அனைவரும் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்ததும், வங்கியின் வாட்ச் மேனை அடித்து, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்தனர். இதனால், அங்கிருந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பதறிப்போனார்கள். மேலும், அங்கிருந்தவர்களை மிரட்டி உட்காரவைத்துடன், உள்ளே சென்று கேஷியர் சந்தோஷ் குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த இரண்டு லட்ச ரூபாய் மற்றும் வாட்ச்மேனின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கேஷியரை மீட்ட ஊழியர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 

கேஷியர் சந்தோஷ் குமார், இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு, வங்கிப் பணிக்கு அவர் வந்துள்ளார். சம்பவம்குறித்து வழக்குப் பதிந்துள்ள டெல்லி போலீஸ், ``கொள்ளையர்கள் கேஷியரை கட்டிப்போட முயலும்போது, அவர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொள்ளையர்களில் ஒருவன் அவரது மார்பில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தனர். இதற்கிடையே, கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க