வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:13 (13/10/2018)

`சுத்தமான காற்று நோயற்ற வாழ்வைத் தரும்’ - ராமாயண நாடகத்தில் சீதையின் தந்தையாக நடித்த மத்திய அமைச்சர்!

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனின் நேற்றைய புதிய அவதாரம்தான் இப்போ ட்ரெண்டிங். 

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அமைச்சராக இருப்பவர், ஹர்ஷவர்தன். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று,  டெல்லி செங்கோட்டையில் லவகுஷ அமைப்பினர் ஏற்பாடுசெய்திருந்த ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அமைச்சராக அவர் கலந்துகொள்ளவில்லை. ராம்லீலாவில், சீதையின் தந்தையாக மிதிலை நாட்டின் மன்னனான ஜனகனாகத் தோன்றினார். 

அரச உடை, பெரிய மீசை என ராஜ கம்பீரத்துடன் தோன்றிய அமைச்சரை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தார்.  நாடகத்தில் ராமருடன் உரையாடும் காட்சியில், சுற்றுச்சூழல் தூய்மை தொடர்பான வசனங்களை அவர் பேசினார். ``நீங்கள் இயற்கை சூழ்ந்த சுற்றுச்சூழலில்தான் வாழ ஆசைப்படுவீர்கள் என்று தெரியும். காற்று சுத்தமாக இருந்தால், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்” என்ற விழிப்பு உணர்வு வசனங்களைப் பேசினார்.   

இந்த நிகழ்ச்சிக்கு, முன்னதாகவே இது தொடர்பாக அவர் ட்வீட் செய்துள்ளார். தற்போது சுற்றுச்சூழல் தொடர்பாக அவர் பேசிய வசனங்கள் வைரல் ஆகியுள்ளது. இதற்கு முந்தைய ராம்லீலா நிகழ்ச்சியில் நடிகராக இருந்து அரசியலில் களமிறங்கிய, டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி கலந்துகொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.