வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (13/10/2018)

கடைசி தொடர்பு:17:40 (13/10/2018)

`ரூ.10-க்காக வாக்குவாதம்' - 20 ஆண்டுக்கால நண்பரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற நபர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 10 ரூபாய்க்காக நடந்த வாக்குவாதத்தில், சலூன் கடைக்காரர் ஒருவர், தனது 20 ஆண்டுக்கால நண்பரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர், பிரெம்பால் கங்க்வார். 42 வயதான இவர், தனது நண்பரான அஹிபரன் லால் என்பவரின் சலூன் கடைக்கு முடி வெட்டுவதற்காகச் சென்றிருக்கிறார். முடி வெட்டிய பிறகு, அவர்களுக்கிடையே 10 ரூபாய்க்காக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றவே, பிரெம்பாலைக் கத்தரிக்கோலால் குத்திவிட்டு அஹிபரன்லால் சம்பவ இடத்தில் இருந்து தப்பியிருக்கிறார். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பிரெம்பாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் கூறுகையில், `10 ரூபாய்க்காக அஹிபரன் லால் - பிரெம்பால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறவே, பிரெம்பால், அஹிபரன் லாலைத் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அஹிபரன்லால், முடிவெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தரிக்கோலால் அவரைக் குத்தியிருக்கிறார். இதைத் தடுக்கச் சென்ற பிரெம்பாலின் மகனையும் அஹிபரன்லால் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், அங்கிருந்து அஹிபரன்லால் தப்பிவிட்டார். அவர்கள் இருவரும் 20 ஆண்டுக்கால நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடியவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம்’’ என்றனர்.