வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (13/10/2018)

கடைசி தொடர்பு:21:43 (13/10/2018)

`சேலம் ரயிலில் ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?’ - 2 ஆண்டுகளுக்குப் பின்னர் துப்புத் துலங்கியது

சேலம் - சென்னை ரயிலில் கொண்டுவரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ரயில் கொள்ளை

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9ல், சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பற்றிய தகவல்கள் பெற பீகார், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களுக்குச் சென்ற போலீஸார் கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை திரட்டினர்.

இந்நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் சென்னையில் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில்,``இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் அவர்கள் பயணித்து கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்களை திரட்டினர். தொடர் விசாரணையில், மத்தியபிரதேச மாநிலத்தில் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் அம்மாநில காவல்துறையிடம் பேசி, கொள்ளையர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை திரட்டினர். தீவிர விசாரணைக்குப் பின்னர் அந்தக் குழு, ரயில் கொள்ளை வழக்கில் தொடர்புடையது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட இருவர் சென்னை வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ரோஹன் பார்தி ஆகிய 2 பேர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்’’ என்றனர். 

மேலும், கொள்ளை சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், ``கடந்த 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 -ம் தேதி 5 கொள்ளையர்கள் கொண்டு குழு ஓடும் ரயிலின் மேற்கூரையில் இருந்துகொண்டு, ரயில் சின்னசேலத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேற்கூரையைத் துளையிட்டு, இருவர் மட்டும் அது வழியே உள்ளே சென்றுள்ளனர். பின்னர், உள்ளே இருந்த மரப்பெட்டிகளை உடைத்து லுங்கிகளில் பணத்தை எடுத்துக்கொண்டு, விருத்தாசலம் வந்ததும் மற்ற கூட்டாளிகளிடம் பணத்தைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மொத்தமாகத் தப்பித்துவிட்டனர் எனத் தெரிய வந்தது. 

இந்த கொள்ளைக்கூட்ட தலைவர் மேஹர்சிங் மற்றும் மற்ற குற்றவாளிகள் சிலர் வேறு வழக்குகளில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இவர்கள், பலூன் விற்பனை செய்தும், பொம்மை விற்பனை செய்தும், கொள்ளை அடிப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து, பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வேறு குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பாகவும், விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.