வெளியிடப்பட்ட நேரம்: 00:10 (14/10/2018)

கடைசி தொடர்பு:00:10 (14/10/2018)

டெல்லியில் நீதிபதி மனைவி மற்றும் மகனைச் சுட்ட காவலர் - பொதுவெளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

டெல்லிக்கு அருகேயுள்ள குர்கான் நகரில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனைத் துப்பாக்கியால்  சுட்டக் காவலாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு

டெல்லி மாவட்ட கூடுதல்   அமர்வு நீதிபதியாக இருப்பவர் கிரூஷ்ணன் காந்த் ஷர்மா. இவர் தனது மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோருடன் ஆர்காடியா மார்கெட்டுக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.  மனைவி மற்றும் மகனை காரிலே அமரச்சொல்லிவிட்டு, நீதிபதி மட்டும் மார்கெட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உதவிக்காக நியமிக்கப்பட்ட காவலாளி மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர்  கூறுகையில், ``நீதிபதி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காவலராக பணியாற்றி வரும் மஹிபால்தான் இத்தகைய செயலைசெய்துள்ளார்.  32வயதான மஹிபால், நீதிபதி உள்ளிட்ட மூன்றுபேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் 3 மணி அளவில் வெட்டவெளியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.