வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (14/10/2018)

கடைசி தொடர்பு:09:33 (14/10/2018)

ஜி.டி.அகர்வாலின் கடைசி 111 நாள்களும், கடந்த 40 ஆண்டுகளில் நாசமான கங்கையும்!

மத்திய நீர்வளத்துறை அமைச்சக விதிகளின்படி கங்கையில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது, துணி துவைப்பது போன்றவற்றைச் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மூன்று நாள் சிறைவாசமும் கிடைக்கும்.

ஜி.டி.அகர்வாலின் கடைசி 111 நாள்களும், கடந்த 40 ஆண்டுகளில் நாசமான கங்கையும்!

றந்துகொண்டிருக்கும் கங்கையைக் காப்பாற்றப் பல்வேறு சூழலியலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். சூழலியலாளர்களைப் பொறுத்தவரை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொடூரமான உண்மை ஒன்றுண்டு.  இந்திய அரசு அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. கங்கையைக் காப்பாற்றுவதற்காக ஒரு வாரம் இரண்டு வாரமல்ல, 111 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜி.டி.அகர்வாலின் இறப்பு அதனை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

"கங்கையையே கைவிட்டவர்கள், என்னையா கவனிக்கப்போகிறார்கள்! நான் இன்னும் சில தினங்களே இருப்பேன். குளுக்கோஸ் டிரிப்ஸ்களை கழட்டிவிடுங்கள். என் மரணம் கங்கையைக் காப்பாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கட்டும்"

 

ஜுன் 22-ம் தேதி மாசுபாட்டிலிருந்து நதியைக் காப்பாற்ற வலியுறுத்தி அவர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் அக்டோபர் 11-ம் தேதி மரணிக்கும்வரை தொடர்ந்தது. அவரது இறப்பு இன்று நதியைக் காக்க மிகப்பெரிய போரை நோக்கி மக்களை இட்டுச்செல்கிறது. கழிவுகள் தொடர்ச்சியாகக் கலப்பதை எதிர்த்துக் கடந்த நாற்பது ஆண்டுகளாக முயன்றுகொண்டிருந்தார். அந்தக் கழிவுகள் கங்கையை மட்டுமல்ல, அதைச் சார்ந்திருக்கும் அத்தனை நீர்நிலைகளையும் சீரழித்துவிடுமென்று அவர் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அவருடைய போராட்டம் கங்கை ஆன்மிகரீதியாகப் புனித நதியென்பதால் அல்ல. இதனால் பாதிக்கப்படப்போவது பங்களாதேஷ் வரை நீண்டிருக்கும் அந்நதியைச் சார்ந்து வாழும் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்பதால். அடிப்படையில் பேராசிரியரும் ஆய்வாளருமான அவர் நதியின் அழிவு விளைவிக்கும் பேரபாயங்களைப் பற்றி அறிவியல்பூர்வ ஆதாரங்களைச் சமர்ப்பித்தவர். நதியில் கட்டப்படவிருந்த பல அணை கட்டுமானத் திட்டங்கள் தடுக்கப்படுவதில் முக்கியப் பங்குவகித்துப் போராடியவர். 1970-களில் கான்பூர் ஐ.ஐ.டி-ல் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவருடைய சிந்தனை முழுக்க கங்கைமீதே இருந்தது. அப்போது அவருக்கிருந்த கேள்வி ஒன்று மட்டுமே, "கங்கை தன்னைத் தானே சுத்தம் செய்துகொண்டிருந்தது. அந்தத் திறன் இப்போது எங்கே சென்றது?"

ஜி.டி. அகர்வால்

"கங்கை அதிலிருக்கும் படிவுகளையும் நுண்ணுயிரிகளையும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளப் பயன்படுத்துகிறது. அந்த நதி வெறும் தண்ணீருக்கானதில்லை. அந்தத் தண்ணீரையும், சூழலையும் தூய்மைப்படுத்தும் திறன்கொண்ட வண்டல்களைக் கொண்ட ஒரு இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம்" என்பதையும் அந்தத் திறனை இன்று தொலைத்துக் கொண்டிருப்பதையும் தன் மாணவனையே ஆய்வுசெய்ய வைத்து நிரூபித்தார். அவரைப் பொறுத்தவரை கங்கை தேங்கிவிடக்கூடாது. 2008-ம் ஆண்டு முதல் அதன் கிளைநதியான பகீரதியில் கட்டவிருந்த நீர்மின் நிலையத்தை எதிர்த்தபோது தொடங்கியது அவரது கங்கைக்கான போராட்டம். அதன்பிறகு தொடர்ச்சியாகப் புனித நதியை மீட்பதற்காக இயங்கிக் கொண்டிருந்தார். இப்போது அதைக் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்துள்ளார்.

 மத்திய நீர்வளத்துறை அமைச்சக விதிகளின்படி கங்கையில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது, துணி துவைப்பது போன்றவற்றைச் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மூன்று நாள் சிறைவாசமும் கிடைக்கும். ஆனால், அந்தச் சிறிதளவு எச்சில் கங்கையில் கலப்பதால்தான் அதன் புனிதத்தன்மை அழிந்துவிடுகிறதா? கடலளவு சாக்கடைக் கழிவுகளைச் சுமந்துசெல்லும் அதில் துப்பாமலிருந்தால் மட்டும் சுத்தமாகியிருக்குமா?

நாட்டின் மிகப்பெரிய நதியைக் காப்பதற்காக முதல் கங்கை செயல்திட்டம் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் பாயும் கங்கையின் பாதையில் அமைந்திருக்கும் 25 நகரங்களைத் தேர்வு செய்தார்கள். அங்கிருந்து வெளியாகும் கழிவுகளை நதியில் கலப்பதைத் தடுக்கவும், நதியைச் சுத்தம் செய்யவும் கொண்டுவரப்பட்ட அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதற்குப் பிறகு 1993-ம் ஆண்டு இரண்டாம் கங்கைச் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. அதில் கங்கை மட்டுமின்றி அதன் கிளைநதிகளான யமுனை, கோமதி, தாமோதர், மகாநதி ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள். அவற்றில் கலக்கப்படும் கழிவுகளும் கங்கையிலேயே வந்து கலப்பதால் அதுவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், அந்த முயற்சியிலும் பலனில்லை. 2009-ம் ஆண்டு இருபதாம் தேதி மத்திய அரசு கங்கைக்கு தேசிய நதி என்ற கௌரவத்தை வழங்கியது. அதோடு தேசிய நதியைக் காக்கவேண்டியதை அவசரத் திட்டமாகக் கருதி கங்கைச் செயல்திட்டத்தைப் புதுப்பித்து மீண்டும் கொண்டுவந்தது. அதோடு கங்கை நதிநீர் ஆணையத்தையும் அமைத்தார்கள். கங்கையில் மாசுபாட்டைக் குறைக்க அதில் நீரோட்டம் எப்போதும் இருந்துகொண்டேயிருக்க வேண்டுமென்று அந்த ஆணையம் தெரிவித்தது. அப்போதுதான் கழிவுச் சாக்கடையாகத் தேங்கி நிற்காது. அது நதியைச் சுத்தம்செய்ய வசதியாக இருக்கும் என்றார்கள். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்ட போதும்கூட, இன்னமும் கங்கையை நம்மால் சுத்தம்செய்ய முடியவில்லை. அதன் மாசுபாட்டு அளவு முன்னெப்போதையும்விடப் பயங்கரமாக அதிகரித்துள்ளது.

Ganges Pollution Infography

ஆறுகள் சூரிய ஒளி, ஆக்ஸிஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும் திறன்கொண்டவை. அதிலும் கங்கைநதியில் கலக்கும் கழிவுகளைச் சுத்தம்செய்ய அதில் பேக்டீர்யோஃபேஜஸ் என்ற நுண்ணுயிர்கள் இருக்கின்றன... இல்லை இருந்தன. 1896-ல் ஆங்கிலேய பாக்டீரிய ஆராய்ச்சியாளர் எர்னெஸ்ட் ஹாங்கின் கங்கை நீரை ஆய்வுசெய்தார். அப்போது காலரா நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் கங்கையில் கலக்கும் நீரில் முன்பு இருந்ததையும் அது கங்கையில் கலந்தபின் நதிநீரில் அந்த பாக்டீரியாக்கள் இல்லாததையும் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு அவர் செய்த ஆராச்சியின் மூலம் கங்கையில் கலக்கும் நுண்கிருமிகளைக் கொல்லும் ஆன்டி-பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது தெரிந்தது. அதற்குப் பிறகு 1916-ம் ஆண்டு கங்கையை ஆய்வுசெய்த கனடிய நீரியல் விஞ்ஞானி  ஒரு நுண்கிருமியைக் கொல்லும் நுண்ணுயிர் மற்றொன்றைத் தாக்காது. வெகுசில மட்டுமே அனைத்து நுண்கிருமிகளையும் அழிக்கும் திறனுடையதாக இருக்கும். அந்தவகை நுண்ணுயிர்கள் கங்கையில் வாழ்வதை உறுதிசெய்தார். கங்கைக்கு இருந்த இந்தத் திறன் அதை அறிவியலிலும் புனிதமானதாகக் கருதவைத்தது. ஆனால், அந்த நுண்ணுயிர்களே அழிந்துபோகும் அளவுக்கு கங்கை இப்போது மாசடைந்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் அதை எந்தவகை நுண்ணுயிரிகளாலும் சுத்தம்செய்ய முடியாதென்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கங்கைக் கரையைச் சுற்றி குடியிருப்புகளும், மக்கள் தொகையும்  அதிகமாகிவிட்டது. அனைவரும் அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு மிஞ்சிய கழிவுகளைத் திருப்பிக் கொடுக்கிறார்கள். ஒருமுறையல்ல, கங்கோத்ரியிலிருந்து டைமண்ட் துறைமுகம் அருகே வங்காள விரிகுடாவில் கலப்பதுவரை தனது 2,500 கி.மீ நீண்ட பயணத்தில் கங்கை பலமுறை கொல்லப்படுகிறது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்மேலாண்மை வாரியம் வெளியிட்ட அறிக்கை, மனிதக் கழிவுகளில் உருவாகும் கொடிய நுண்கிருமிகள் கங்கையில் இவ்வளவென்று சொல்லமுடியாத அளவுக்குப் பரவிருப்பதாகச் சொன்னது. அதைவிட அச்சத்தை விளைவித்தது என்னவென்றால் அதன் அளவு இன்றும்கூடக் குறையவில்லை மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதே. அதுவும் ஹிமாலயத்திலிருந்து வரும்வழியில் ருத்ரபிரயாக், தேவபிரயாக் போன்ற இடங்களிலேயே அந்த அளவு நதிநீரின் ஆக்ஸிஜன் உற்பத்தித் தரத்தை பாதிக்கத் தொடங்கிவிட்டது. இதுபோக நதிநீரை நீர்மின் நிலையங்களுக்காக எடுப்பதும் நதியின் இருப்பைச் சந்தேகத்துக்கு இடமாக்கிவிட்டது. விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்த புனித நதி இன்று கழிவுகளால் நாற்றமடிக்கும் சாக்கடையாக மாறிவிட்டது.

முதல்தர நகரங்களாகக் கருதப்படும் 36 நகரங்களே 96 சதவிகிதம் கழிவுநீரை நதியில் கலந்துகொண்டிருக்கின்றன. நகரங்களின் நீர்விநியோகத்தை வைத்துக் கணக்கிடும்போது அவை நாளொன்றுக்கு 2,723 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நதியில் கலந்துகொண்டிருக்கின்றன. அதுபோக நகரங்களுக்குள் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர், ஏரி நீர் போன்ற மற்ற நீராதாரப் பயன்பாடுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் அவை சுமார் 6000 மில்லியன் லிட்டர் கழிவைக் கங்கையில் கலந்துகொண்டிருக்கின்றன. கழிவுநீர் உற்பத்தியிலும், கழிவுநீர் சுத்திகரிப்பிலும் கடந்த நாற்பது வருடங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மக்கள்தொகைக்குத் தகுந்தவாறு அதிகமாக உருவாகும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாமல் போகிற போக்கில் ஆற்றில் கலந்துவிட்டுக் கொண்டிருக்கின்றன கங்கை நதியோர நகர நிர்வாகங்கள். அவற்றின் 80% கழிவுகள் நதியில்தான் கலக்கின்றன. அதுபோக 764 தொழிற்சாலைகள் நதியோரத்திலேயே இருக்கின்றன. அதில் காளி, ராம்கங்கா போன்ற இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே நாளொன்றுக்கு விஷத்தன்மை வாய்ந்த தொழிற்சாலைக் கழிவுநீரை 500 மில்லியன் லிட்டருக்கும் மேல் கங்கையில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு வன்கொடுமைகள் அந்த ஒரு நதியின்மீது இத்தனை ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றன. அதைத் தடுப்பதற்கும் கங்கையைக் காக்கவும் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

கங்கை

இந்தியாவின் சுற்றுச்சூழல் பல்வேறு வகைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அந்த அபாயங்களையும் எடுத்துரைக்கும் சூழலியலாளர்களும், சூழலியல் போராளிகளும் மிகவும் அவசியமானவர்கள். அவர்களின் இழப்பு நாட்டுக்குப் பேரிழப்பு. இது தொடர்ந்தால் அவர்களோடு சுற்றுச்சூழலுக்கும் சமாதி கட்டவேண்டிய நிலை வந்துவிடும். ஜி.டி அகர்வாலின் கடைசி 111 நாள்கள் நமக்கு உணர்த்துவது இதைத்தான். தொழிற்சாலைகளும், முறையற்ற நகரக் கட்டுமானத் திட்டங்களும் கங்கைக்குச் சமாதி கட்டும்முன் அதைக் காப்பாற்றுவதே கங்கைப் போராளி ஜி.டி.அகர்வாலுக்குச் செய்யும் சிறந்த நினைவஞ்சலியாக இருக்கமுடியும்.


டிரெண்டிங் @ விகடன்