வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (14/10/2018)

கடைசி தொடர்பு:10:40 (14/10/2018)

பருவ மழை பாதிப்பு - தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய கேரள அரசு

கேரள மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ஏலக்காய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, ஏலக்காய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது கேரள அரசு.

பருவமழை பெருவெடிப்பு காரணமாகக் கேரள மாநிலமே வெள்ளத்தால் மூழ்கிப்போனது. பல ஆயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், தமிழக கேரள எல்லைப்புற மலைகளில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள ஏலத்தோட்டங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை நின்றாலும், தற்போது ஏலச் செடிகள் அனைத்தும் ஒடிந்த நிலையிலும், அழுகிய நிலையிலுமே காட்சியளிக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி, மீண்டும் புதிய ஏலச் செடியை நடவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், ஏலத்தோட்டத்தையே புதிதாகக் கட்டமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்  விவசாயிகள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய  விவசாயி ஒருவர், “மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குப் பல லட்சம் ரூபாய் செலவாகும். எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது என கேரள அரசு கேட்டது. அதன் அடிப்படையில், சேதத்தைக் கணக்கிட்டு கேரள அரசிற்கு விண்ணப்பித்தோம். விண்ணப்பத்திற்கு 7 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கியுள்ளார்கள். அதனை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்கள். இந்த தொகை மிகச் சிறிய அளவு தான் என்றாலும், எங்களைப்பற்றி நினைத்துப்பார்த்த கேரள அரசிற்கு நன்றி” என்றார்.

ஏலத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் ஏல வர்த்தகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.