வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (14/10/2018)

கடைசி தொடர்பு:12:04 (14/10/2018)

‘உன் மனைவி, மகனை சுட்டுவிட்டேன்’ - நீதிபதிக்கு போன் செய்த பாதுகாப்பு அதிகாரி

டெல்லியில் காவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவலாளியிடம் தொடர்ந்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதி

டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாகக் கிருஷ்ணன் காந்த் ஷர்மா. இவர் தனது மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நீதிபதியின் பாதுகாப்புக்காக மஹிபால் என்ற காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிபதியின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் நீதிபதியின் மனைவி அவரது மகன் துருவ் இருவரும் ஆர்காடியா மார்கெட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் காவலர் மஹிபால் உடன் சென்றுள்ளார். மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு நீதிபதியின் மனைவி மற்றும் மகன் காருக்கு திரும்பியுள்ளனர். வாகனத்தை எடுக்குமாறு காவலாளியிடம் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் நீதிபதியின் மனைவியை சுட்டுள்ளார். இதனைத்தடுக்க முயன்ற அவரது மகன் துருவின் வயிறு மற்றும் தலைப் பகுதியை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தார். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மார்க்கெட் பகுதியில்  நடைப்பெற்ற இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்தக்காட்சிகளை தங்களின் செல்போன்களில் படம்பிடித்துள்ளனர். 

இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில்  மஹிபால்தான் இத்தகைய செயலை செய்தாஎ என காவல்துறையினர் உறுதி செய்தனர். இதற்கிடையில் மாலை 4.45 மணிக்கு நீதிபதிக்குக் கால் செய்த மஹிபால், ‘உன் மனைவி மற்றும் மகனைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டேன், அவர்களைச் சென்று பார்’ என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு காவல்துறை அதிகாரிகள் அளித்துள்ள பேட்டியில், ‘மாலை 5 மணியளவில் மஹிபாலை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்ய முற்படும்போது அவர்களை நோக்கியும் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார் ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விசாரணையில், மஹிபால் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும் போது, பொதுவெளியில் நீதிபதி, மஹிபாலை திட்டுவார். இதில் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். கடந்த வாரம் நீதிபதியிடம் விடுமுறை கேட்டுள்ளார் ஆனால் அவர் மறுத்துவிட்டார் எனக்கூறியுள்ளார். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.