வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (14/10/2018)

‘சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம்’ - மிரட்டும் சிவ சேனா

சபரிமலைக் கோயிலில் பெண்கள் நுழைய முயன்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என கேரளாவின் சிவ சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. 

சபரிமலை

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வழிபட அனுமதி உண்டு. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்த நிலையில் இதை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள், 'ஐயப்பன் கோயிலுக்குள் சென்று வழிபடப் பெண்களை அனுமதிக்க வேண்டும்' என்று கோரி 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 'சபரிமலைக் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கோயிலைத் திறந்தால் யார் வேண்டுமானாலும் சென்று வழிபட முடியும். ஆண்கள் வழிபாடு செய்வதற்கு உரிமை உள்ளது போன்று பெண்களுக்கும் உரிமை உண்டு' என உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. 

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர், கேரளாவில் உள்ள திரை பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலர் போராட்டம் நடத்தினர். இந்த மாதம் சபரிமலை நடை பாதை திறக்கப்படவுள்ளதையடுத்து இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இளம் வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம் என கேரளாவின் சிவ சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய சிவ சேனா உறுப்பினர் பெரிங்கமலா அஜி, “வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் கோயிலினுள் நுழைய முயன்றால் எங்கள் கட்சியில் உள்ள தற்கொலை படையைச் சேர்ந்த பெண்கள் 7 பேர் பம்பை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வார்கள். 17 மற்றும் 18-ம் தேதிகளில் எங்கள் கட்சியின் பெண்கள் பம்பை ஆற்றின் அருகில் காத்திருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.