வகுப்பறையில் கொல்லப்பட்ட தலைமை ஆசிரியர்! - மாணவர்கள் கண்முன்னே நடந்த பயங்கரம் | A school principal was hacked to death in front of 20 students

வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (15/10/2018)

கடைசி தொடர்பு:09:33 (15/10/2018)

வகுப்பறையில் கொல்லப்பட்ட தலைமை ஆசிரியர்! - மாணவர்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்

பெங்களூரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசியரை சில மர்ம நபர்கள், மாணவர்கள் கண்முன்னே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிரியர் கொலை

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் 60 வயதான ரங்கநாத். இவர் நேற்று காலை தன் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு  நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 6 பேர் வகுப்பறையில் இருந்த தலைமையாசிரியரை மாணவர்கள் கண்முன்னே சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். இதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

பின்னர் அந்த மர்ம நபர்கள் ஒரு காரில் வேகமாகக் கிளம்பியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தலைமை ஆசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன் முடிவில், தற்போது அந்தப் பள்ளிக் கட்டடம் உள்ள நிலம் பெரும் சர்ச்சைக்குரியது என்றும் அதன் காரணமாகவே தலைமையாசிரியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். 

இதையடுத்து, கொலை செய்த 6 பேரில் ஒருவர் பெங்களூரின் மஹாலக்ஷ்மி நகரில் சுற்றித் திரிவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காலர்களை, கொலையாளி தாக்க முற்பட்டுள்ளார். அப்போது போலீஸாருக்கும் கொலையாளிக்கும் இடையே நடந்த தாக்குதலில் கொலையாளியின் கால்களில் குண்டு பாய்ந்துள்ளது. பிறகு அவரைக் கைது செய்த போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மூலம் தலைமையாசிரியர் கொலையில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மர்மநபர்கள் பள்ளியில் இருந்த பாதுகாவலரை தாக்கி வெளியில் அனுப்பிவிட்டே உள்ளே நுழைந்துள்ளனர். கொலை சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை. இருப்பினும் அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.