வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (16/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (16/10/2018)

‘மரணித்த சிறுவனின் ஆத்மா என்னை அழைக்கிறது!’ - இளைஞரின் தற்கொலை கடிதத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி

`தான் கண்ணால் பார்த்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் ஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்துகொண்டேன்’ என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை


மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சௌரப் (19). இவர் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்தபோது, தன் தங்கையின் துப்பட்டாவால் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது அவரின் குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``நான் கண்ணால் விபத்து ஒன்றைப் பார்த்தேன். அந்த விபத்தில் பலியான சிறுவனின் ஆத்மா என்னை அழைத்தது; அதனால்தான், நான் தற்கொலை செய்துகொண்டேன்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ``அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், தங்கையை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சௌரப் கடந்த மாதம் விபத்து ஒன்றை நேரில் பார்த்ததை உறுதி செய்தனர். விபத்தில் பெண் மற்றும் சிறுவர் பலியானது, சௌரப்க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் பிரம்மை பிடித்தது போல இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் சௌரப் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். தன் நண்பர்களும் இதுபோல கொண்டாட வேண்டும் என அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், அவரது இந்தத் திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.