வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (17/10/2018)

கடைசி தொடர்பு:08:30 (17/10/2018)

``அன்று நான் அழுதே விட்டேன்!” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்! #BB12

இந்தி பிக் பாஸ் தொடரில் ஸ்ரீசாந்த், சச்சின் குறித்து நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். 

ஸ்ரீசாந்த்

நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் 2007 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர்  மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பி.சி.சி.ஐ-ஆல் வாழ்நாள்தடை விதிக்கப்பட்டவர். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும், தனது எதிர்காலத்தை இப்போது சினிமா மூலம் வடிவமைத்து வருகிறார். ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த `டீம் 5' படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. இந்திப் படங்களிலும் நடித்துவருகிறார்.  

இந்த நிலையில்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அவர் தனது சக போட்டியாளர் அனூப் என்பவரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் குறித்து நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். ஸ்ரீசாந்த், ``2011 -ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை நாங்கள் கைப்பற்றிய பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு நேர்காணல்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்தன. வீரர்கள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சியில், கேள்விகளைக் கேட்பவர், அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பேசி வந்தார். அந்தப்பட்டியலில் எனது பெயர் வரவில்லை. அவர் முடிக்கும் தருவாயில் குறுக்கிட்ட சச்சின், `ஸ்ரீசாந்த் சிறப்பாக விளையாடினார். இந்தக் கோப்பையைக் கைப்பற்றியதில் அவரின் பங்கும் முக்கியமானது’ என்று தெரிவித்தார். அந்தத் தருணத்தில் நான் அழுதே விட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.