போராட்டங்களுக்கு நடுவே இன்று திறக்கப்படுகிறது கோயில் நடை - உச்சகட்டப் பாதுகாப்பில் சபரிமலை | Tight Security As Sabarimala Temple

வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (17/10/2018)

கடைசி தொடர்பு:09:24 (17/10/2018)

போராட்டங்களுக்கு நடுவே இன்று திறக்கப்படுகிறது கோயில் நடை - உச்சகட்டப் பாதுகாப்பில் சபரிமலை

அனைத்து வயதுள்ள பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இன்று கோயில் நடை திறக்கப்படவுள்ளது. 

சபரிமலை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்குப் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கேரளம் போராட்டக் களமாக மாறியுள்ளது. போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. 
இதற்கிடையில் இன்று மாலை சபரிமலை கோயில் நடைதிறக்கப்படவுள்ளது.

கேரளா மாநிலம் முழுவதும் போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளதால் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டங்களுக்கு நடுவே கோயில் நடை எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். ‘ நாங்கள் இங்கு பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். தேவஸ்தானம் போர்டு, கோயில் நடை திறக்கப்படுவது குறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை’ என அங்கிருக்கும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நிலக்கல் பகுதியில் பாஜக பிரமுகரான ஷோபா சுரேந்திரன் என்பவர் முகாம் அமைத்து பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றார். இந்த போராட்டத்தில் பெண்கள்தான் அதிகளவில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது. ‘சபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மீறித் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.