வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (17/10/2018)

கடைசி தொடர்பு:14:30 (17/10/2018)

இலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன?

ந்திய உளவு அமைப்பான 'ரா'  (RAW) தன்னைக் கொல்ல முயன்றதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்

சிறிசேனா

கொழும்பில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, ``அரசியல் காரணங்களுக்காக 'ரா' அமைப்பு என்னைக் கொல்ல முயன்றது. ஆனால், அந்த விஷயம் பிரதமர் மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை'' என்று அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். 

மேலும், இலங்கையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர் என்னைக் கொல்ல முயன்றார்.  'ரா ' அமைப்பின் உளவாளி அவர். 'ரா' அமைப்பின் செயல்பாடுகள் தன்னிச்சையானவை. அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வின் செயல்பாடுகள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தெரியாது. அது போலவே இந்திய பிரதமருக்கும் இந்தத் தகவல் தெரியாது'' என்றும் அவர் கூறியுள்ளார். 

பிரபல ஆங்கிலப் பத்திரிகை சிறிசேனா இவ்வாறு பேசியதை உறுதி செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்ததாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 'கொழும்பு துறைமுகத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள முனையத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கக் கூடாது' என்று அதிபர் சிறிசேனா கருத்து தெரிவித்தபோது ரணில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது என்று உறுதி அளித்துள்ளோம்'' என ரணில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக வாக்குவாதம் வெடித்த நிலையில் சிறிசேனா, ' ரா ' மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை டெல்லியில்  பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை அதிபர்கள் 'ரா' அமைப்பைக்  குற்றம் சாட்டுவது முதன்முறையல்ல. 2015-ம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட ' ரா 'அமைப்பும் இந்திய பிரதமர் மோடியும்தான் காரணம் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே குற்றம் சாட்டியதும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை போலீஸ் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதேவேளையில். சிறிசேனா 'ரா' அமைப்பைக் குற்றம்சாட்டவில்லை என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் மங்கள சமரவீரா மறுத்துள்ளார். 'இது தவறான பிரசாரம் ' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Research and Analysis Wing என்று அழைக்கப்படும் 'ரா ' அமைப்பு தன்னிச்சையான அதிகாரங்கள் கொண்ட இந்தியாவின் உளவு அமைப்பு. அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மெஸாட், ரஷ்யாவின் கே.ஜி, பி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புகள் மீதுதான் வெளிநாட்டுத் தலைவர்களைக் கொல்லத் திட்டம் போட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. இந்த உளவு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது `ரா' அமைப்பு 'வீக்'  என்றே சொல்ல வேண்டும். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பை அறிந்த அளவுக்குக்கூட 'ரா ' அமைப்பு பற்றி இந்தியர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. அப்படியிருக்கையில் இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு வியப்பையே அளிக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க