வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (17/10/2018)

கடைசி தொடர்பு:17:47 (17/10/2018)

இந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு!

நடப்பு 2018-ம் ஆண்டில், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள், ரூ.90,746 கோடி அளவுக்கு தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இழப்பு, இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே உச்சமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள், அந்நிய முதலீட்டின் இழப்பு ஒரு லட்சம் கோடியை எட்டக்கூடும் எனத் தெரிகிறது.

அந்நிய முதலீடு


கடந்த சில மாதங்களாக இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாலும், அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் குறைத்துவருகிறார்கள். இந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 2008, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே எதிர்மறையாகச் சென்றுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டில் 41,215.5 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டில் 23,079 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இதையடுத்து தற்போது வரலாற்று உச்சமாக ரூ.90,746 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 

2014-ம் ஆண்டில் 2,56,213 கோடி ரூபாய் அந்நிய முதலீடு கிடைத்துள்ளது. இது அதிகபட்ச அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை உச்சபட்ச அளவாகும். கடந்த 2017-ம் ஆண்டில்கூட அந்நிய முதலீடு 2,00,048 கோடியாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள அந்நிய முதலீட்டின் சரிவு, இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டில் வரும் பொதுத்தேர்தலுக்குப் பிறகு நிலை மீண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.