வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (17/10/2018)

கடைசி தொடர்பு:17:33 (17/10/2018)

`புகாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்’ - பதவியை ராஜினாமாசெய்த எம்.ஜே.அக்பர்!

பாலியல் புகார் எதிரொலியாக, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பதவியை எம்.ஜே.அக்பர் ராஜினாமாசெய்தார். 

எம்.ஜே.அக்பர்

உலகம் முழுவதும் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், சீண்டல்களை #Metoo என்ற பெயரில் பெண்கள் தெரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் புகாரை முன்வைத்தனர். புகார் எழுந்தபோது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த அமைச்சர், இதுகுறித்து வாய்திறக்காமல் மௌனம் காத்துவந்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பிய அமைச்சர் எம்.ஜே.அக்பர், நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்று மறுத்திருந்தார். மேலும், பாலியல் புகார் எழுப்பிய பத்திரிகையாளர்மீது டெல்லி நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கையும் தாக்கல்செய்திருந்தார். 

இந்த நிலையில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக எம்.ஜே.அக்பர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`என்மீது எழுப்பப்பட்ட பொய்ப் புகாருக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்வதே சரியானது என்று தோன்றுகிறது. எனவே, நான் வகித்துவந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். நாட்டுக்குச் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.