வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (17/10/2018)

கடைசி தொடர்பு:18:03 (17/10/2018)

திறக்கப்பட்டது சபரிமலை நடை! போராட்டக்காரர்களால் பெண்கள் சந்நிதிக்கு வரவில்லை

'அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50-க்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், கடந்த 28-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிளம்பியது. இது தொடர்பாக, சபரிமலை கோயிலுக்குள் அனைவரும் பாதுகாப்பாகச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி, ஏராளமான காவல் துறையினர் கோயிலைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவல்துறை

பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், பெருமளவில் அப்பகுதியில் குவிந்ததால் பதற்றம் நிலவியது. குறிப்பாக நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர, காவல் துறையினர் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். பெரும் போராட்டத்துக்கிடையே, 5 மணி அளவில் கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரும் கலவரத்துக்கிடையில் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், போராட்டக்காரர்களால் பெண்கள் யாரும் சந்நிதிக்கு வரவில்லை. மேலும், போராட்டத்தின் எதிரொலியாக, சபரிமலை சந்நிதானம் வட்டாரத்தைச் சுற்றி 144 தடை போடப்பட்டுள்ளது.