வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (17/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (17/10/2018)

தந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்! 

இந்திய திரைத் துறை பெண் படைப்பாளர்களில் மிக முக்கியமானவர், இயக்குநர் மற்றும் நடிகை நந்திதா தாஸ். தமிழில் 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்கள்மூலம் பிரபலமானவர். சமீபகாலமாக,  தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனப் பெண்கள், பலரின்மீது குற்றம் சாட்டும் # metoo  இயக்கம், விஸ்வரூபம் எடுத்துவருகிறது. தேசம் முழுவதிலும் உள்ளோர் பலர் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.

                                                                                         #metoo

 நந்திதா தாஸ், இந்த இயக்கத்துக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நிஷா போரா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், நேற்று நந்திதா தாஸின் தந்தையும், ஓவியரும், சிற்பியுமான ஜதின் தாஸ், 2004-ம் ஆண்டு அவருடைய பணியிடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவித்தார். 

#metoo

இதற்குப் பதிலளித்த ஜதின் தாஸ், இந்தப் புகார் முற்றிலும் பொய்யாகவும், ஆபாசமாகவும் இருப்பதாக அதை மறுத்தார். இந்நிலையில், தன் தந்தை மீதான புகாரைப் பற்றி நடிகை, இயக்குநர் நந்திதா தாஸ் சமூக வலைதளத்தில் தன்னுடைய நிலைப்பாட்டைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் கூறியிருப்பதாவது," #metoo  இயக்கத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும், என் தந்தை நேரடியாக நிராகரிக்கும் அவர்  மீதான புகார்கள் சற்று என்னைப்  பாதித்தாலும், இந்த #metoo  இயக்கத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்து சொல்வதைப் போல, இப்போது பாதிப்படைந்த பெண்களின் புகார்களை நாம் கவனித்துக் கேட்க வேண்டும். அதே சமயம்,  தவறான புகார்களை இந்த இயக்கம் அதன் முக்கியத்துவத்தை இழக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு ஆதரவு தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.