`சபரிமலையில் தடியடி; 144 தடை!’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு | Section 144 imposed at Sabarimala

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (17/10/2018)

கடைசி தொடர்பு:19:03 (17/10/2018)

`சபரிமலையில் தடியடி; 144 தடை!’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு

நிலக்கல் மற்றும் பம்பையில் தடியடி நடத்தப்பட்ட சமயத்தில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. போலீஸார் மீது கல்லெறியும் சம்பவம் நடைபெற்றது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, சபரிமலையில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.க சார்பில் பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வீச்சு

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர் சங்கங்கள் சார்பில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தம்பதி, செய்தியாளர்கள் 5 பேர் மீது தாக்குதல் நடத்தினர். நிலக்கல் மற்றும் பம்பையில் இன்று மாலை போராட்டம் தீவிரமானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் பக்தர் சங்கத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டு மோதலாக வெடித்தது. பம்பையில் நடந்த  காவல்துறை, பக்தர்கள் மோதலில் ராகுல் ராஜன், பிரவின் ஆகிய போலீஸார் மற்றும் பக்தர் சங்கத்தைச் சேர்ந்த சரோஜா, ராஜேஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பம்பை தேவசம்போர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்திணம்திட்டா கலெக்டர் நூஹ்இந்தநிலையில், மாலை 5 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி ஐயப்பன் கோயில் நடையைத் திறந்தார். நடை திறந்த பிறகு, வெளியே வந்த பத்தணம்திட்டா கலெக்டர் நூஹ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை, பம்பை, நிலக்கல், இலவங்கல் ஆகிய 4 இடங்களில் நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தடை உத்தரவு தொடருமா என்பது குறித்து நாளைதான் கூற முடியும்" என்றார். இந்த நிலையில் நாளை கேரள பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டவுடன் மஹா கணபதி ஹோமம் மற்றும் அதைத் தொடர்ந்து உஷ பூஜை ஆகியவை நடக்கின்றன. பின்னர் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாதாந்தர பூஜைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.