Published:Updated:

1,400 கிலோமீட்டர்; 4,500 ரூபாய் சைக்கிள், சூரத் டு உ.பி - நம்பிக்கையுடன் பெடல் போடும் தொழிலாளர்கள்

representation image
representation image

சூரத்தில் எங்களுக்கு வேலை இல்லை. பணம் இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, குடும்பத்தினருடன் நாள்களைச் செலவிடலாம் எனப் புறப்பட்டுவிட்டோம்.

`வீட்டு ஞாபகம் வந்துடுச்சு… 4,500 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கிட்டோம். இந்த சைக்கிள்தான் எங்களை குடும்பத்தினரிடம் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் பெடலை மிதிக்கின்றனர் 6 தொழிலாளர்கள். சூரத்தில் இருந்து 1,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபதேபூர்தான் இவர்களின் பூர்வீகம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிழைப்பு தேடி குஜராத் வந்த இந்த 6 தொழிலாளர்களும் சூரத் நகரில் சேலைகளை மொத்த வியாபாரம் செய்யும் கடையில் வேலை கிடைத்துள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் சூரத்திலேயே தங்கிவிட்டனர். மத்திய அரசு, முதலில் 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்தது. கையில் இருந்த பணத்தைக் கொண்டு அந்த நாள்களைக் கடத்திவிட்டனர். மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது, அவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துவிட்டது.

வேலையும் இல்லை கையில் பணமும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பண உதவிகேட்டு முதலாளிக்கு போன் செய்தால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவுசெய்துள்ளனர்.

1,400 கிலோ மீட்டர் தூரத்தை எப்படி நடந்துசெல்வது என யோசனையில் இருந்துள்ளனர். அப்போதுதான், இவர்களைப் போலவே சூரத்தில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் சைக்கிளை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்குப் பயணமான விவரம் தெரியவந்துள்ளது. உடனே, சைக்கிள் விற்பனை செய்யும் நபரைப் பிடித்து, சைக்கிளை வாங்கி தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

சைக்கிள் பயணம் குறித்து விக்ரம் என்ற இளைஞர் பேசுகையில், “ ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணிக்கு, எங்களுக்குத் தேவையான பொருள்களை சைக்கிள்களில் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம். எங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. குடும்பத்தைப் பிரிந்து இருக்க மனமில்லை. சூரத்தில் எங்களுக்கு வேலையும் இல்லை. பணம் இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, குடும்பத்தினருடன் நாள்களைச் செலவிடலாம் எனப் புறப்பட்டுவிட்டோம்.

எங்கள் கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்துவிட்டது. கடைசியில், சில ஆயிரங்கள்தான் இருந்தன. அப்போதுதான் சைக்கிள் வியாபாரி ஒருவர் சைக்கிள்களை விற்பனை செய்யும் விவரம் கேள்விப்பட்டு, நாங்கள் அவரைத் தொடர்புகொண்டு 4,500 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கினோம். உத்தரப்பிரதேச அரசு கூறியிருக்கிறது, எங்களைப்போன்ற தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துவருவோம் என்று. அவர்கள் எப்போது வருவார்கள்... நாங்கள் செத்து மடிந்த பின்னரா? ஒரு மாதமாக இங்கு இருக்கிறோம், எங்களின் நிலை குறித்து யாரும் விசாரிக்கவில்லை.

Representational Image
Representational Image

செல்லும் வழியில் இருக்கும் பெட்ரோல் பங்க்-கில் எங்களுக்கு தேவையான தண்ணீரைப் பிடித்துக்கொள்கிறோம். வழியில் யாராவது நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உணவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை உணவு கிடைத்தாலும் போதும், அதைக்கொண்டு நாங்கள் சமாளித்துவிடுவோம். நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல 9 நாள்கள் ஆகும் என நினைக்கிறோம்.

நாங்கள் ஊருக்கு வருகிறோம் என்ற விவரத்தைக்கூட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. அவர்கள் தேவையில்லாமல் கவலைகொள்வார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் நடந்துசெல்வதையும், அதில் சிலர் உயிரிழந்த செய்தியையும் என் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். நீ இப்படி எல்லாம் நடந்து வரவேண்டாம் என அம்மா கூறினார். அதனால்தான் சைக்கிள் வாங்கிவிட்டேன்” என்றார் வேடிக்கையாக.

இந்தியாவில்  ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு

சுமையர் என்ற இளைஞர் பேசுகையில், ” நான் திரும்பவும் சூரத்துக்கு வேலைக்கு வரமாட்டேன். இந்த நாள்களில், நான் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். குடும்பத்தினருடன் இருப்பதைத் தவிர வேறு சந்தோஷமான விஷயம் எதுவும் இல்லை. நகரத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம். இங்கு எனக்கு ஏதாவது நடந்திருந்தால், என் குடும்பத்தினருக்குக் கூட என் முகத்தைக் காட்டாமல் தகனம் செய்திருப்பார்கள். நான் என் ஊரிலேயே ஒருவேலையைத் தேடிக்கொண்டு குடும்பத்தினருடன் இருக்கப்போகிறேன்” என்றார்.

News Source: Theindianexpress

அடுத்த கட்டுரைக்கு