வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/10/2018)

ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில், இணையதளம் மூலம் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைன் ஆர்டர்


கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கும் காலம் மலையேறிவிட்டது. உணவு முதல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கும் வகையில் காலம் மாறிவிட்டது. நுகர்வோரின் தேவைக்களுக்கு கேற்ப ஆன்லைன் நிறுவனங்களும் ஆஃபர்களை அவ்வப்போது வாரி வழங்கிவருகின்றன. இதில் சில சமயங்களில், நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறொரு பொருள் கிடைப்பதும்,  ஆர்டர் செய்த பொருளில் குறைபாடுகள் இருப்பதும் தீர்க்கமுடியாத பிரச்னையாகவே இருந்துவருகிறது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்போடு தங்கள் பொருளை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பெரும்  ஏமாற்றத்தைத் தருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் நகரின் ஹட்கோ குடியிருப்பில் வசித்துவருபவர், கஞ்சனன் காரத். இவர், கடந்த 9-ம் தேதி செல்ஃபோன் வாங்குவதற்காக ஆன்லைன் பிரபல இணையதளம் ஒன்றை நாடியுள்ளார். மொபைலைத் தேர்வுசெய்த அவர், 9,134 ரூபாய் பணம் செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். ஒரு வாரத்துக்குள் செல்ஃபோன் அனுப்பிவைக்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 14-ம் தேதி அவருக்கு சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து மொபைல் பார்சல் வந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்த காரத் அதிர்ச்சியடைந்தார். அந்த பார்சலில் மொபைலுக்குப் பதிலாக முழு செங்கல் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த காரத், ஹர்சூல் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், ஏமாற்றுதல், மோசடிசெய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.