வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (18/10/2018)

கடைசி தொடர்பு:12:18 (18/10/2018)

தலைமை பதவி இனி மூன்றாண்டுகள் மட்டுமே! - கறார் காட்டும் ரிசர்வ் வங்கி!

மூன்றாண்டு பதவிக்காலத்தை ரிசர்வ் வங்கி நீட்டிக்க மறுப்பதை ஊழலைத் தடுக்கும் முயற்சியாகத்தான் பார்க்க முடிகிறது. இது நல்ல விஷயம்தான். எனினும், இதன் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால், திறமையாகச் செயல்பட நினைக்கும் தலைமைக்கு மூன்றாண்டுக்காலம் என்பது குறுகிய காலகட்டமாக இருக்கும்.

தலைமை பதவி இனி மூன்றாண்டுகள் மட்டுமே! - கறார் காட்டும் ரிசர்வ் வங்கி!

சமீபத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எம்.டி மற்றும் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து சந்தா கோச்சார் ராஜினாமா செய்த பிறகு அப்பதவிக்கு சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார். அவரை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாகக்குழு 3 அக்டோபர் 2023 வரை ஐந்து ஆண்டுக்காலத்துக்கு பதவியில் இருக்கும்படி நியமித்திருந்தது. இந்த நியமன உத்தரவை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, ஐந்து ஆண்டுகளாக இருந்த பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாகக் குறைத்து ஒப்புதல் வழங்கியது.

ரிசர்வ் வங்கி

அதேபோல, யெஸ் பேங்க் எம்.டி & சி.இ.ஓ ரானா கபூரின் பதவிக்காலம் கடந்த 31.8.2018-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதன்பின், 1.9.2018 முதல் 31.8.2021 வரை, மேலும் மூன்றாண்டுக் காலத்துக்கு அவரது பதவியை நீட்டித்த யெஸ் பேங்க் நிர்வாகக்குழு, அந்த உத்தரவை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அந்த நீட்டிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத ரிசர்வ் வங்கி, 2019 ஜனவரி 31 வரை மட்டும் பதவி நீட்டிப்பு செய்ய ஒப்புக்கொண்டது.

மீண்டும் யெஸ் பேங்க் நிர்வாகக்குழு சார்பில், நிதிக்கணக்குகளை முறையாக முடித்துக்கொடுப்பதற்காக ஏப்ரல் 2019 வரையும், ஆண்டுப் பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகளை முடித்துக்கொடுக்க செப்டம்பர் 2019 வரையும் என ரானா கபூரின் பதவி நீட்டிப்புக்கு இரண்டுவிதமான வாய்ப்புகளைக் கோரியது. ஆனால், இரண்டையும் கறாராக மறுத்துவிட்ட ரிசர்வ் வங்கி, 2019 ஜனவரி இறுதியோடு ரானா கபூர் பதவி விலகும்படியும், அடுத்த தலைமையைப் பிப்ரவரி 1, 2019-ல் நியமிக்க வேண்டுமென்றும் கூறிவிட்டது.


ரிசர்வ் வங்கியின் இத்தகைய கறார் செயல்பாட்டுக்குக் காரணமாக சந்தா கோச்சார் - வீடியோகான் நிறுவன முறைகேடு, நிரவ் மோடி - பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு போன்றவை காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வங்கியின் தலைமைக்கு நெருக்கமாகிக்கொண்டுதான் இத்தகைய ஊழல்கள் நடைபெறுகின்றன என்பதால், வங்கியின் நிர்வாகக்குழு சம்மதித்தாலும், பதவி நீட்டிப்புக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுக்க மறுத்துவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைமுகமாக ரிசர்வ் வங்கியைச் சாடியதும்கூட காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 

reserve bankவங்கித் தலைமையின் பதவி நீட்டிப்பை மறுக்கும் ரிசர்வ் வங்கியின் தீவிரத்தன்மை குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, "மூன்றாண்டுக்காலப் பதவிக்காலத்தை ரிசர்வ் வங்கி நீட்டிக்க மறுப்பதை ஊழலைத் தடுக்கும் முயற்சியாகத்தான் பார்க்க முடிகிறது. இது நல்ல விஷயம்தான். எனினும், இதன் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால், திறமையாகச் செயல்பட நினைக்கும் தலைமைக்கு மூன்றாண்டுக்காலம் என்பது குறுகிய காலகட்டமாக இருக்கும். முதல் ஓராண்டுக்காலம், அந்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ளவே செலவாகிவிடும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே அவரால் முழுவீச்சில் செயல்பட முடியும். இறுதி ஆறு மாத காலத்துக்கு அவரால் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்க முடியாது. எனவே, வங்கித் தலைமையின் செயல்பாட்டைப் பொறுத்து, மேலும் மூன்றாண்டு காலத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யலாம். அல்லது குறைந்தது மேலும் இரண்டாண்டுக் காலத்துக்காவது பதவி நீட்டிப்பு வழங்கலாம்" என்றார். 

ஆக, வங்கித்துறையில் ஊழலை ஒழிக்கும் எண்ணத்தோடு பதவி நீட்டிப்பை மறுக்கும் ரிசர்வ் வங்கி, திறமையாகச் செயல்படும் தலைமைக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவதும் சரியானதாகவே இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்